சென்னை: சனாதனத்தை புரிந்துகொள்ள உதயநிதி என்ன ஆராய்ச்சி செய்தார்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் கலந்துகொண்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் `சனாதன ஒழிப்பு மாநாடு’ சென்னையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்'” என்று பேசினார்.
மேலும், “சனாதனம் என்கிற சொல் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது, மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானவைதான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்!” என்றும் கூறியிருந்தார்.
இது சர்ச்சையானது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல வழக்குகள் உதயநிதிமீது பதியப்பட்டு உள்ளன. மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி, `இந்துக்களுக்கு எதிரான பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்கூட உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், `தி.மு.க அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணி சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது’ எனக் கூறி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி நாட்டின் அனைத்து பா.ஜ.க தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர். `உதயநிதி பதவி விலக வேண்டும். மன்னிப்புக் கேட்க வேண்டும்’ எனப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், `சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசிவிட்டு, எந்தத் தகுதியின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதியாக உதயநிதி நீடிக்கிறார் என்பதை விளக்க வேண்டும்?’ எனக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரன்டோ மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி தரப்பில் பதில் மனு தாக்கல்செய்து வாதாடிய தி.மு.க மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா… மனுதாரர்களுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதிலிருந்தே இந்த வழக்கில் கண்ணுக்குத் தெரியாமல் பா.ஜ.க-வின் பங்கு இருப்பது தெளிவாகிறது. ஆர்ட்டிக்கிள் 25-ஐ ஓர் அரசுக்கு எதிராகத்தான் பயன்படுத்த முடியுமே தவிர, ஒரு தனிநபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது” எனத் தெரிவித்தார்.
சனாதனம் குறித்து அரசியலமைப்புச் சட்டத்திலோ, வேறு எந்தச் சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்தான் உதயநிதி பேசினார்.
இந்தக் கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை” என உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
அப்போது நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து நவம்பர் 9ந்திக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று விசாரணை நடை பெற்றது. அப்போது உதயநிதிக்கு ஆதரவாக வாதாடிய திமுக எம்.பி. வில்சன், மத நம்பிக்கையை மட்டுமின்றி நாத்திக கொள்கைகளையும் அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பதாக கூறப்பட்டது. அப்போது, “அம்பேத்கர் நிகழ்த்திய உரைகளின் அடிப்படையில் உதயநிதியின் பேச்சு இருந்தது. சாதிய அமைப்புகள் உருவாக காரணமாக இருந்த வர்ணாசிரம தர்மத்தை ஒழிக்கவே உதயநிதி இவ்வாறு பேசினார் என்றார்.
ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதனை கேட்காமல் இருக்க வேண்டுமே தவிர, அவரது கருத்துரிமையை தடுக்க முடியாது. அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டுமில்லாமல் நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. மேலும், 1902 மற்றும் 1937ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களின் அடிப்படையில்தான் உதயநிதியின் பேச்சு இருந்தது” என்று பேசினார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த, , நீதிபதி, “சனாதனத்தை புரிந்துகொள்ள உதயநிதி என்ன ஆராய்ச்சி செய்தார்? எனக் கேள்வியெழுப்பினார். மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி நிகழ்த்திய உரையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், உதயநிதி வழக்கறிஞர் கூறியபடி, , “பனாரஸ் இந்து பல்கலைகழகம் பிரசுரித்த உரையையும் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி வழக்கை இன்றைக்கு (10ந்தேதி) தள்ளி வைத்தார்.