போபால்: மோடிஜியின் முழு அரசியல் அறிவியலில் பட்டம் – காங்கிரஸ் வழங்கிய கணினி மூலம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்,” அரசாங்கத் தால் நடத்தப்படும் நிறுவனங்கள் பிரதமரின் தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 17ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜ இடையேதான் நேரடி மோதல் உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜவும், இழந்த ஆட்சியை அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்ற காங்கிரஸும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை பிரியங்கா காந்தி வெளியிட்டார். அதில், “பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். 100 யூனிட் மின்சாரம் தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் பாதி சலுகையில் வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். 2 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப் படும். வேலையில்லா இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வழங்கப்படும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். குறைந்தபட்ச ஆதார விலை (MSP) உத்தரவாதம்: கோதுமைக்கு ரூ 2600, நெல்லுக்கு ரூ 2500 வழங்கப்படும்,
மற்றும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக் கெடுப்பு நடத்தப்படும். போட்டித் தேர்வுக் கட்டணம் 100% தள்ளுபடி செய்யப்படும். குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கப்படும். ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். எஸ்சி-எஸ்டி, ஓபிசி ஒதுக்கீட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். கற்க. கற்பிக்க திட்டம்: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி, 1-8 வகுப்புக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, 9-10-ஆம் வகுப்புக்கு ரூ.1000, 11-12-ம் வகுப்புக்கு ரூ.1500 வழங்கப்படும்” என ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா, பாஜக கேட்கிறது 70 ஆண்டுகளில் என்ன நடந்தது? 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லையா என கேளவி எழுப்பியவர், “காங்கிரஸ் ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகளைக் கொண்டு வந்தது, அதன் பின்னணியில் ஜவஹர்லால் நேருவின் எண்ணம் நாட்டை முன்னேற்றக் கொண்டு செல்லும் நிறுவனங்களை அமைப்பதாகும்” என்றார்.
ஆனால், அரசு நடத்தும் நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைப்பதும், மக்கள் கிட்டே இருந்து பணத்தை எடுப்பதும் பாஜகவின் கொள்கையாகி விட்டது,” என்று அவர் குற்றம் சாட்டினார். பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இன் நிலை குறித்து பாஜக தலைமையிலான மையத்தை குறிவைத்த காந்தி, அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
அரசு வேலைகள் தனியார்மயமாகும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது, தங்கள் பணம் என்ன ஆனது என்று ஊழியர்கள் பயப்படுகிறார்கள், என்று கேள்வி எழுப்பியவர், கடந்த 70 ஆண்டுகளில் (காங்கிரஸ் ஆட்சியில்) எதுவும் நடக்கவில்லை என்று மோடி கூறுகிறார்… மோடி ஜி படித்த பள்ளி காங்கிரஸால் கட்டப்பட்டது… மோடி ஜி கல்லூரிக்குச் சென்றாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் குறைந்தபட்சம் சான்றிதழ் அவரது முழு அரசியல் அறிவியலில் பட்டம் – காங்கிரஸ் வழங்கிய கணினி மூலம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்,” என்றவார், அந்த காலக்கட்டத்தில், தனது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்ததாகவும், அவர் நாட்டில் கணினிகளை கொண்டு வந்தவர் என்றும் குறிப்பிட்டார்.