ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தது செல்லாது என்று இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரோஷன் ரணசிங்கே உத்தரவை எதிர்த்து ஷம்மி சில்வா தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் அமைச்சரின் இந்த உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிய அமைச்சர் ரணசிங்கே நீதிமன்றத்தையும் விமர்சித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தான் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் மோசமான ஆட்டம் தவிர வாரிய உறுப்பினர்கள் மீது ஏற்கனவே கூறப்பட்டு வந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைப்பதாக நவம்பர் 6 ம் தேதி ரணசிங்கே அறிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்க தலைமையில் இடைக்கால வாரியம் அமைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ஆனால் அமைச்சரின் இந்த அறிவிப்பை ஏற்காத ஷம்மி சில்வா நீதிமன்றத்தை நாடினார்.
நீதிமன்றத்தில் ஷம்மி சில்வாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அடுத்து இந்த விவகாரத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
[youtube-feed feed=1]