சென்னை: சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ரூ.1 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக காரில் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்தது. இதைக்கண்ட காவல்துறையினர் அதை மடக்கி ஆய்வு செய்தனர். அப்போது காரில் இருந்தவர் ஸ்ரீலங்காவைசேர்ந்தவர் என்பதும், அவர் வைத்திருந்த பேக்கில் ரூ.1 கோடி அளவிலான பணம் இருந்ததும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த தி.நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், காரில் வந்தவர், ஸ்ரீலங்காவை சேர்ந்த கமலநாதன் என்பதும், அமெரிக்காவில் இருந்து பணிபுரிந்து திரும்பியதாகவும், தனது நண்பர்களான மடிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திக்கேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக்கேயன் ஆகியோரை சந்திக்க வந்ததாகவும் கூறினார். இதையடுத்து நடத்தப்பட்ட மேல்விசாரணையில், அவர், சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கா சென்னைக்கு பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதை காவல்துறையினர் பறிமுதல் செய்து, கமலநாதனையும், அவர் வந்த கார் மற்றும் பணத்தை, வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக, இலங்கைத் தமிழர் கமலநாதன், வெங்கடகிருஷ்ணன், கார்த்திக்கேயன், கார்த்திக்கேயன் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தொடர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், காரில் ரூ.1 கோடி கடத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.