புஜ், குஜராத்
நாளை தொடங்க உள்ள ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் புஜ் நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர அகில இந்தியச் செயற்குழு கூட்டம் நாளை முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 381 பொறுப்பாளர்கள் இந்த செயற்குழுவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம்:
”இக்கூட்டத்தில், சங்க வேலைகள் குறித்த ஆய்வு மற்றும் கடந்த செப்டம்பரில் புனேவில் நடைபெற்ற சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் கூடுதலில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விஜயதசமி உரையில் இடம்பெற்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். சமுதாயத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக சங்க வேலைமுறைகளில் தேவையான மாற்றங்கள், உதாரணமாகச் சங்கத்தின் முதலாமாண்டு முகாம் இரண்டாம் ஆண்டு முகாம், மூன்றாம் ஆண்டு முகாம்களில் 2024 முதல் புதிய பாடத்திட்டங்கள் அமல் செய்யப்படும்.
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, நாட்டின் ஒவ்வொரு கிராமம், நகரங்களில் உள்ள கோவில்களில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும். \சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த தகவல், அனைத்து ஸ்வயம் சேவகர்களுக்கும் அளிக்கப்பட்டு அதன் மூலம் இதில் சமுதாயமும் பங்கேற்க வழி ஏற்படும்..”
என்று தெரிவித்துள்ளார்.