சென்னை: சென்னையில் இன்றுமுதல் புதிய வாகன விதி அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, காவல்துறை அறிவித்துள்ள வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களும், அதனால் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும்  வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சென்னையில்  தற்போதைய நிலையில், சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதனால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கும் வகையில், குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு 30 நவீன ‘ஸ்பீடு ரேடாா் கன்’ கருவி கள் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு விதித்து போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 4ஆம் தேதி (இன்று)  முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேகவரம்பை கடைபிடிப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவது பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழி வகுக்கும், இதனால் குறிப்பாக, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படைய செய்யும் என்பதால் வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதன்படி, 2003ம் ஆண்டில் விதிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களுக்கான வேக வரம்புகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் மாற்றியமைத்துள்ளது.

புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகள்படி,

சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை ஆட்டோக்கள் 35 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 25 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

 கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை 40 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 35 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை  50 கி.மீ வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற உண்மைகளை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003ல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமைத்தார்.

இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, புதுடெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகியவற்றில் நகரங்களில் வேக வரம்பு மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேலும், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஆர்டிஇ, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுடன் போக்குவரத்து அமைப்பு மற்றும் சாலை வடிவமைப்பைப் பொறுத்து வாகனங்களின் வேக வரம்பு நிர்ணயம் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், சென்னை பெருநகரில் உள்ள சாலைகளின் வகை மற்றும் பல்வேறு வாகன வகைகள் மற்றும் இடங்களுக்கான வேக வரம்புகள் குறித்து இக்ககுழு பரிந்துரை செய்தது. அதன்படி, இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன வேக வரம்புகளை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்த வேக வரம்பு நிர்ணயமானது நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.