நாமக்கல்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
கடந்த 2009 ஆம் ஆண்டில் நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் குடமுழுக்கு விழா நடந்திருந்தது. சுமா 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆஞ்சநேயர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக இந்த விழாவிற்காக ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மகா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கு விழாவிற்காகப் பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. வருண தீர்த்தம், புனிதப்படுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெரு வேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்யா பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் மகா குடமுழுக்கு நடைபெற்றன. குடமுழுக்கு விழாவில் அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். குடமுழுக்கையொட்டி பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.