அமராவதி: சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதை தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

 ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக,  தற்போதைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு, ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அவருக்கு கீழமை நீதிமன்றங்கள் ஜாமின் மறுப்பு தெரிவித்தன. இதற்கிடையில், சந்திர பாபு நாயுடுவின்   வலது கண்ணில் பிரச்சினை  ஏற்பட்டதால், மருத்துவர்கள்  அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதை காரணமாக கூறி,   ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி இதை டுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்