ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிகரணை, சென்னை
இத்திருக்கோவில் மிகவும் பழமையான வரலாற்றுப் பின்னணி கொண்டது. கி.பி.1725ல் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. ஸ்ரீ (சிலந்திவலை), காள (நாகப்பாம்பு), கஸ்தி (யானை) இந்த மூன்று பெயரும் சேர்ந்து ஸ்ரீகாளகஸ்தி என்று பெயர் பெற்றது. அந்தக் காலத்தில் ஸ்ரீகாளகஸ்திக்கு செல்ல முடியாதவர்கள் பரிகாரம் செய்ய சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் ஸ்தலத்தில் “ராகு-கேது” பரிகாரத்தை செய்து வந்துள்ளனர்.
இங்கும் சிலந்தி வலை, நாகம் சிவபூஜை செய்தல், யானை பூஜை செய்தல், மயில் சிவபூஜை செய்தல், கண்ணப்பநாயனார், சிவபெருமானுக்கு இரு கண்களை கொடுத்தது போன்ற சிற்பங்கள் “ராகு- கேது” பரிகாரத்திற்காகவே அமைந்துள்ளது. ஆதியும், அந்தமும் இல்லாத ஆதிபுரீஸ்வரர் இங்கு நவகிரக நாயகராக அமர்ந்துள்ளார். ஆகவே இங்கு “ராகு-கேது” பரிகாரம் செய்தல், ஸ்ரீகாளகஸ்தியில் கிடைக்கும் சிறப்பான பலனைப் போல் இங்கும், தோஷங்கள் நீங்கி சிறப்பான பலனைப் பெற்று நல் வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
மாசி சிவராத்திரி அன்று காலை 655க்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தை ஆராதனை செய்யும் காட்சி.
மாசி மாதம் 15 நாட்கள் (மாசி 15 முதல் 30 வரை) சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தை ஆராதனை செய்யுமாம்.
இத்திருத்தலம் ராகு கேது பரிகார ஸ்தலம்.
கிழக்கு பார்த்த ராஜகோபுரம். திருக்குளம் கோவிலுக்கு எதிரே உள்ளது. சமீபத்தில் செப்பனிடப்பட்டு அழகாக உள்ளது.
ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், த்வஜஸ்தம்பம் மற்றும் நந்தி உள்ளது. சூரியர், சந்திரன் இருபக்கமும் வீற்றிருக்கின்றனர்.
வெளிப் பிரகாரத்தில் சிவ ஆஞ்சநேயர், மகா கணபதி. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், ராகு, கேது, சொர்ண ஆகர்ஷண பைரவை, சரபேஸ்வரர், வியாக்ரபரதர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.
மையத்தில் ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சாந்த நாயகி அன்னை தெற்கு நோக்கியும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். காலபைரவர் சிலையும் சன்னதியில் அமைந்துள்ளது.
வியாக்ரபாதர் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டதால் இந்த இடம் சோழர் காலத்தில் புலியூர் கோட்டத்தின் கீழ் இருந்ததாக நம்பப்படுகிறது.
வேளச்சேரி – தாம்பரம் பிரதானசாலையில் பள்ளிகரணை உள்ளது.