நெல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அரசை கலைக்கும் யோசனை இல்லை என்று கூறிய நிலையில், கலைப்பத குறித்து “யோசித்துத்தான் பார்க்கட்டுமே” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டி ராஜ்பவன்மீது, சென்னை சேர்ந்த ரவுடியான கருக்கா வினோத், பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வீடியோவுடன் விளக்கம் அளித்த நிலையில், கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளுடன் அங்கு வரும் வரை காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா என கேள்வி எழுப்பப்பட்டு வரகிறது. ரவுடி பெட்ரோல் பாட்டில் பற்ற வைத்து தூக்கி வீசும்போதுதான் காவல்துறை அவனை கைது செங்யதுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்ததுடன், செய்தியாளர்களுடன் பேசும்போது, “ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தியவரை திமுக வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுத்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் குடிமகனான ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ, என்.ஐ.ஏ போன்ற அமைப்புகள் விசாரித்தால் தான் முழு உண்மையை வெளியே கொண்டு வர முடியும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே இல்லை. மத்தியில் 9 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு எந்த அரசின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை. ஆளுநர் மாளிகை மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்தவர், ஆட்சியை கலைப்பது குறித்து ‘யோசித்து தான் பார்க்கட்டுமே? என்ன நடக்கிறது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். நடந்த சம்பவம் குறித்து காவல்துறை டிஜிபி விளக்கம் அளித்து இருக்கிறார். விசாரணையும் நடைபெற்று வருகிறது.” என பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சவால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி பேசிய நிலையில், மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், சவால் விடுவது போன்ற நடவடிக்கைகள், திமுக அரசு கலைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும், கலைத்தால் அனுதாபம் பெற்று மீண்டும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.