சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
இந்திய நாடாளுன்றத்துக்கு (2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை அகில இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதற்கிடையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவை மேற்கொள்ள வாக்காளர் முகாம்களை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 27ந்தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடுத்து கூறினார்கள். கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, போலி வாக்காளர் பெயர்களை கண்டறிந்து நீக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் வைத்தனர். இந்த கருத்துக்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேட்டுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.