டெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உடனே உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி அவசர வழக்காக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்து உள்ளது.

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ள நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது ஜாமின் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றதால் நிராகரிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, ஏற்கெனவே விசாரிக்க வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. மேலும், அடுத்த வாரம் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால், வரும் 30ம் தேதி, இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த அவசர விசாரணை முறையீட்டின் போது,  செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவேதான், ஜாமீன் கோரி விரைவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாக, செந்தில் பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதி மன்றம் ஏற்க மறுத்து விட்டது.