சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகாத இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள செந்தில்பாலாஜிமீது ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அவரது வீடு மற்றும் உறவினர்களின் வீடு உள்பட பல இடங்களில் கடந்த ஜூன் மாதம் அதிரடி சோதனை நடத்திய நிலையில், ஜுன் மாதம் 14ம் தேதி இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நெஞ்சுவலி என கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்பட்டது. தற்போது, செந்தில் பாலாஜில் புழல் சிறையில் இருந்து வருகிறார்.
தனதுஉடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமின் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமின் மனுக்கள் பல முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், அன்றைய தினமே மீண்டும் சிறைக்கு கூட்டிச்செல்லப்பட்டார். இரு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், உடல்நிலை பாதிப்பை கருத்தில்கொண்டு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் கடந்த 15-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, செந்தில் பாலாஜி ஜாமினுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எஸ் சுந்தரேசன் வாதிட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது எனக்கூறி ஜாமீன் வழங்க முடியாது என, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.