டெல்லி: நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டுக்கான 78 நாள் ஊதியத்திற்கு சமமான ஊதியம் போனசாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனைப் பாராட்டி, 11,07,346 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,968.87 கோடியை போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய கேபினட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்தியஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனைப் பாராட்டி, 11,07,346 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,968.87 கோடியை போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும், ரயில்வே 1,509 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது என்று தெரிவித்துள்ளதுடன், கிட்டத்தட்ட 650 கோடி பயணிகள் பயணித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக நான் -கெசட்டட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம், லேகோ பைலட்டுகள், ரயில்வே கார்டுகள், ரயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப நிபுணர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 11.07 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் ரயில்வே ஊழியர்களை அவர்களின் செயல்திறனில் மேலும் முன்னேற்றத்தை நோக்கி உழைக்க ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.