திருச்சி: பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி அளவில் வசூல் செய்த, பிரபல ஜுவல்லரியான திருச்சி பிரணவ் ஜுவல்லரி திடீரென மூடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக புகார்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், அரசியல் கட்சிகளைப்போல, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து பணத்தையும், நகையையும் கொள்ளையடிக்கும் நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல சிட்பண்ட் நிறுவனங்கள் மக்களிடம் பணத்தை வசூலித்துவிட்டு ஸ்வாகா செய்த நிலையில், சமீபத்தில், நியோ மேக்ஸ், ஆருத்ரா கோல்டு உள்பட பல நகைகடை நிறுவனங்களில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்துவிட்டு, அல்வா கொடுத்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக மற்றொரு நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடி வசூல் செய்துவிட்டு, நிறுவனத்தை மூடியுள்ளது. சமீப ஆண்டுகளாக தென்மாவட்டங்களில் கோலோச்சி வந்த பிரணவ் ஜுவல்லரியும் இந்த போர்ஜரி பட்டியலில் இணைந்துள்ளது.
ஐந்து இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2% வட்டிப்பணம் பத்தாயிரம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், பத்து மாதம் காத்திருந்து எந்தவித செய்கூலியும் சேதாரமும் இல்லாமல் 106 கிராம் தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளது பிரணவ் ஜூவல்லரி.
இதுமட்டுமின்றி, மற்ற ஜூவல்லரிகள் நடத்துவதை போலவே, மாதச்சீட்டு முறையை வைத்திருந்தாலும் அதிலும் புதுமையாக 11 மாதம் மட்டும் கட்டினால் போதும் 12-வது மாத சீட்டை பிரணவ் ஜூவல்லரியே கட்டிவிடும்; அதுவே, ஒரு இலட்சத்திற்குமேல் சீட்டு கட்டினால், இரண்டு மாத தவணையை சேர்த்து கட்டிவிடும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு, மேலும், மாதச்சீட்டு தொடங்கி, பிக்சட் டெபாசிட் திட்டம், பழசுக்கு புதுசு திட்டம், இவற்றையெல்லாம்விட, ”அடகுக்கடையில் நகையை வைப்பதால் என்ன பயன்? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாருங்கள். ஒரு வருடம் கழித்து, எந்தவித செய்கூலியும் சேதாரமும் இல்லாமல் பழைய நகையின் அதே எடையில் புதிய நகையை அள்ளிச் செல்லுங்கள்” என்ற அறிவிப்பு மற்றும், என பல திட்டங்களை கைவைசம் வைத்திருக்கிறது, பிரணவ் ஜூவல்லரி. தெய்வீக தங்கம் என்ற சென்டிமென்ட்டும், 0% செய்கூலி, சேதாரம் என்ற வியாபார உத்தியும் வெளிச்சத்தைத் தேடி வந்து நெருப்பில் விழும் ஈசலைப் போல கனிசமான பெண்களை பிரணவ் ஜூவல்லரி ஈர்த்தும் விட்டது. போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, அப்பாவி மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளது பிரணவ் ஜூவல்லரி.
பிரணவ் ஜூவல்லரியின் கவர்ச்சிகரமான அறிவிப்புக்கு மயங்கி பல ஆயிரம் பேர், பீரோவில் பூட்டி வைத்திருந்த நகைகளையெல்லாம் எடுத்துச்சென்று ஜூவல்லரியில் கொட்டியுள்ளனர். மேலும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கி வருtதாக கூறி சில மாதங்கள், ஊக்கத்தைதொகையும் வழங்கியதால், இதை நம்பி பலர் ஏமாந்து பலர் ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை டெபாசிட் செய்தனர். இந்த நிலையில், தற்போது பிரணவ் ஜூவல்லரி மூடப்பட்டு உள்ளதால் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர்.
இந்த பிரணவ் ஜூவல்லரிக்கு திருச்சி, மதுரை உள்பட தென்மாவட்டங்களில் பல இடங்களில் கிளைகள் உள்ளது. மேலும், சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், புதுச்சேரியில் கிளைகளை கொண்டு இந்த கடைகள் அனைத்தும் கடந்த செவ்வாய்க்கிழமை (அப்டோபர் 17) முதல் திடீரென மூடப்பட்டு உள்ளது.
இந்த ஜுவல்லரி பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ஓராண்டு முடிவில், சொன்னபடி பழசுக்கு புதுசாக தங்கத்தை திருப்பித் தரமுடியாத சிக்கலில் சிக்கித்தவித்த நிலையில், கடைகளை அதன் உரிமையாளர்கள் மூடி உள்ளனர். , பிரணவ் ஜூவல்லரி. நான்கு நாட்களுக்கு முன்பாக, நாகர்கோயிலில் ஆரம்பித்து அடுத்தடுத்து அதன் ஒவ்வொரு கிளையையும் மூடியதோடு, இறுதியாக முதல் கிளையாகத் தொடங்கிய திருச்சியிலும் ஷட்டரை இழுத்துவிட்டது பிரணவ் ஜூவல்லரி. திருச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு சாலை மறியல் செய்யுமளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. மதுரையில் 80-க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டிருக்கிறது இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்நிறுவனத்தில் பணத்தையும், தங்கத்தையும் முதலீடு செய்தவர்கள், லபோ திபோ என அலறியடித்துக்கொண்டு, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் காவல்துறையில் தனிப்பட்ட புகார்களை அளித்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இருகுறித்து புகார் தெரிவித்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மதுரை மேலமாசி வீதியிலுள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்கு சில மாதத்துக்கு முன்பு சென்றேன். உரிமையாளர் பழைய நகையை டெபாசிட் செய்தால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடுதல் வட்டியுடன் புதிய நகை பெறலாம் என கூறினார். இதை நம்பி 2022 செப்டம்பர் 24-ல் 40 கிராம் நகை, டிசம்பர் 23-ல் 7.896 கிராம் நகையும் டெபாசிட் செய்தேன். முதலில் டெபாசிட் செய்த நகைக்கு ஓராண்டுக்கு பின் 3 கிராம் தங்கக் காசுடன் புதிய நகையை பெற 2023 செப்.24-ல் கடைக்கு சென்றேன். கடையில் இருந்த ஊழியர்கள் ஒருவாரம் கழித்து வருமாறு கூறினர். ஒரு வாரத்துக்கு பிறகு சென்றாலும் புதிய நகையை வாங்க முடியவில்லை. அக்.12-ம் தேதி சென்றபோது, நகைக்கடை பூட்டியிருப்பது கண்டு அதிர்ந்தேன்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, என்னை போன்று பலரிடம் பழைய நகை டெபாசிட் பெற்றும், நகைக்காக தவணை முறையில் பணம் வசூலித்தும் பல கோடி மோசடி செய்திருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து மதுரை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார். மேலும், மோசடி செய்துள்ள பிரணவ் நகைக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நகையை மீட்டு தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் ஜெட் வேகத்தில் மக்களிடையே பரவிய நிலையில், பிரணவ் ஜூவல்லரியில் டெபாசிட் செய்தவர்கள், சீட்டு போட்டவர்கள் என பலரும் ஜுவல்லரி முன்பு குவிந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பூட்டியிருந்த பிரணவ் நகைக்கடை முன்பு காலை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் சமாதனம் செய்து அனுப்பினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் வழக்கறிஞர் ஜெயா என்பவர் தலைமையில் மாநகர காவல் ஆணையர் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து கூறிய வழக்கறிஞர் ஜெயா கூறுகையில், “தவணை முறையில் பணம் செலுத்துவோர், பழைய, புதிய நகை முதலீடு செய்வோருக்கு கூடுதல் வட்டியுடன் செய்கூலி, சேதாரம் இன்றி புதிய நகைகள் வழங்குவதாக ஆசைவார்த்தைகளை கூறி, ரூ.1 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 40 பேர் திலகர் திடல் காவல் நிலையத் தில் புகார் அளித்தபோது, நகைக்கடை உரிமையாளரே போலீஸ் தரப்பில் பேசி, முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்தார். திடீரென கடையை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்த புகார்கள் தொடர்பாக துணை ஆணையர் மங்களேசு வரன் மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
இந்த பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் செல்வராஜ் என்று கூறப்படுகிறது. இவர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை திருச்சி சின்னகம்மாளத் தெருவில் செல்வம் என்ற பெயரில் வெள்ளி நகைகள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தியவர். இவரது உடன்பிறந்த சகோதரரும் இவரும் இணைந்து இதே பகுதியில் பழைய நகைகளை வாங்கி விற்கும் வியாபாரத்தை தொடங்கியிருக்கின்றனர். நகை அடகுபிடிப்பது, வட்டிக்கு விடுவது, சொந்தமாக ஜூவல்லரி கடை வைப்பது என படிப்படியாக வளர்ந்திருக்கின்றனர். செல்வம் சிறுபட்டறை, செல்வம் அடகுக்கடை, செல்வம் பேங்கர்ஸ், செல்வம் ஜூவல்லர்ஸ்-ஆக மாறியிருந்தது.
தனியாக ஜூவல்லரி ஆரம்பிக்கும் வரையில் ஒன்றாக பயணித்த சகோதரர்கள் அதன்பிறகு, ஆளுக்கொரு திசையில் பயணிக்கத் தொடங்கினர். மதன் செல்வராஜ் ஜூவல்லரி பிசினசோடு, ரியல் எஸ்டேட் பிசினசிலும் ஈடுபட்டிருக்கிறார். தனியாக பசும்பால் பண்ணை ஒன்றையும் நடத்தியிருக்கிறார். இவருக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவர், திருச்சி ராயல் என்பீல்டு ஷோரும் உரிமையாளர் கருணா என்று கூறப்படுகிறது. அவரின் ஆதரவோடு முதன்முதலாக திருச்சியில் பிரணவ் என்ற பெயரில் ஜூவல்லரியை தொடங்கியிருக்கிறார் மதன் செல்வராஜ்.
இவரது கவர்ச்சிகரமான அறிவிப்புக்கு பொதுமக்களிடம் பெருத்த வரவேற்பு கிட்டியது. வியாபாரம் சூடுபிடிக்க மதன் செல்வராஜ் கைகளில் பணமும் குவியத் தொடங்கியது. அதற்கேற்ப, அடுத்தடுத்து 8 கிளைகளை நிறுவியிருக்கிறார். நகைக்கடையில் வசூலான பணத்தை மீண்டும் நகையில் முதலீடு செய்யாமல், ரியல் எஸ்டேட் பிசினஸை நம்பி நிலத்தில் போட்டுள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சினை இன்று அவரையும் புதை குழிக்குள் தள்ளியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.