டில்லி
இஸ்ரேல் நாட்டில் சிக்கி இருந்த பாலிவுட் நடிகை பத்திரமாக நாடு திரும்பி உள்ளார்.
இஸ்ரேலில் 39-வது ‘ஹய்பா’ சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காகப் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா இஸ்ரேல் சென்று இருந்தார்.
நேற்று காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதனால் திரைப்பட விழாவுக்கு சென்ற நடிகை நுஷ்ரத் பரூச்சா அங்குச் சிக்கி அவர் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. பாலிவுட் திரையுலகம் அவரை தொடர்பு கொள்ளப் பல முயற்சிகளை முன்னெடுத்தும் நுஷ்ரத்தை தொடர்பு கொள்ள முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று நடிகை நுஷ்ரத், பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தை வந்தடைந்து அங்கு செய்தியாளர்களிடம் எந்த கருத்தையும் நுஷ்ரத் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
நுஷ்ரத் நடித்த ‘அகெல்லி’ திரைப்படம் ஈராக் பாலைவனத்தில் ஒருவித அசாதாரண சூழலில் சிக்கும் நபர் பாதுகாப்பாக வெளியேறுவதை மையமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.