குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவிடத்தில் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா விண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இஸ்ரோ மூலம் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்து வருகிறது. ஆகவே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளத்தை தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் கடலோரத்தில் இதற்காக அரைவட்ட வடிவில் 2,376 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தைச் சுற்றிலும் ரூ.6.24 கோடியில் தடுப்பு கம்பிவேலி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தை பாதுகாப்பு கருதி, பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதியாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதாவது கிழக்கு கடற்கரை சாலையான தூத்துக்குடி- திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையை ஒட்டியுள்ள படுக்கப்பத்து மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் வட்டத்தில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பகுதியின் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமராபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கப்பத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.