சென்னை: நோயாளிகளின் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தேனியைச் சேர்ந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த எம்.சுமதி என்பவர் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்ததாக கூறியதுடன் சுமதியின் கருப்பையையும் அகற்றியுள்ளனர். ஆனால் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக குழந்தை இறந்ததாகவும், கருப்பை நீக்கப்பட்டதால் மீண்டும் கருவுற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சுமதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
சுமதி அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சார்பில் சுமதி மற்றும் குழந்தையின் மருத்துவ அறிக்கைகள் தொடர்பான முறையான ஆவணங்களை இந்த ஆணையத்தில் பார்வைக்கு சமர்ப்பிக்காமல் புகார்தாரரின் மனித உரிமைகளை மீறியுள்ளார். எனவே, புகார்தாரருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.
சுகாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசு அதிகளவில் செலவு செய்யும் நிலையில், விதிகளுக்கு முரணாக மருத்துவர்கள் செயல்படுவதாக வேதனை தெரிவித்த கண்ணதாசன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உரிய சிகிச்சைப் பதிவேடுகளைப் பராமரிக்கவும், தேவைப்படும்போது அளிக்கவும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை ஆவணங்களை முறையாக பராமரிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குனர் மூலம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு மருத்துவர்களின் மருத்துவ அலட்சியத்தால் பிரசவ காலத்தில் குழந்தை இழந்த பெண்ணுக்கு தமிழக அரசு 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கண்ணதாசன் உத்தரவிட்டார்.