டெல்லி: சீனாவிடம் இருந்து பணம் வாங்கியது தொடர்பாக டெல்லியில் பிரபல ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனா உள்பட வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 38.05 கோடி பணம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அதனடிப்படையிலேயே நியூஸ்கிளிக் ஊடகம் உள்பட அதில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடு அலுவலகம் என டெல்லி, நொய்டா, காசியாபாத் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊடக நிறுவன குற்றச்சாட்டு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் டெல்லி வீட்டில் காவல்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்டெல்லியில் யெச்சூரியின் வீட்டில் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக 2 பேரை காவலில் எடுத்துள்ளதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தில்லி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.