சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த 138 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தற்போது சென்னையின் உள்ள விமான நிலையம் போதுமானதாக இல்லை. பெங்களூரு விமான நிலையம் போன்று சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளத. இதனால், இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பரந்ந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பல கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது உறுதி ஆகிவிட்டது. புதிய விமான நிலையத்திற்காக பரந்தூரில், 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாநில தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி சென்று ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சா் உடன் ஆலோசனையும் நடத்திவிட்டு வந்தார். இதில் தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆனால், புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர். ஆனால், இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுவசதி செய்து தரப்படும் என்றும், இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறி வருகிறது. மேலும், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. இதற்காக மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் மச்சேந்திரநாதன் குழுவினர் , புதிய பரந்தூா் விமான நிலையம் குறித்து ஆய்வு செய்ய நேற்று (1ந்தேதி) சென்றனர். அப்போது, அவர்களுக்கு அப்பகுதி மக்கள் எடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஏகனாபுரம் பகுதியில் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விமான நிலைய எதிா்ப்புக் கூட்டமைப்புக் குழுவினா், ஏகனாபுரம் அம்பேத்கா் சிலை அருகே பரந்தூா் – கண்ணந்தங்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது, சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.