பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக்குடன் அதிமுக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில கட்சிகளை ஸ்வாகா செய்து முன்னணி கட்சிபோல கெத்து காண்பித்து வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் இதே தந்திரத்தை கையாண்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் அதற்குப் பின்னான இணைப்பு, இரட்டை தலைமை மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டி ஆகியவற்றால் சோர்ந்து போன தொண்டர்கள் அமமுக, ஓ.பி.எஸ்., பாஜக என வெவ்வேறு பக்கம் ஒதுங்க ஆரம்பித்தனர்.
அதிமுக-வில் எஞ்சி இருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவர மதுரையில் நடத்தப்பட்ட எழுச்சி மாநாடும் நொசுத்துப் போனது.
இந்த நிலையில் திராவிட கொள்கைக்கு எதிராகவும் திராவிட தலைவர்களை விமர்சிப்பதை மட்டுமே தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை மாநாடு குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமை குறித்தும் கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து…
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) September 25, 2023
இது 2 கோடி தொண்டர்களைக் கொண்டதாகக் கூறப்படும் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இனியும் பாஜக-வின் விமர்சனங்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து கொண்டிருந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சி கலகலத்துப் போய்விடும் என்பதை உணர்ந்த அதிமுக தலைமை, கூட்டணி விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்க தீர்மானித்தது.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை டெல்லிக்கு தூது அனுப்பிய அதிமுக தலைமையின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் வேறு திட்டத்துடன் பாஜக அவர்களைத் தட்டிக்கழித்து அனுப்பியது.
பாஜக கூட்டணியில் அதிமுக-வின் செல்வாக்கு குறைந்து வருவதாகக் குற்றம்சாட்டிய நிர்வாகிகள் டெல்லியில் இருந்து திரும்பியதும் கொந்தளிக்கத் துவங்கினர்.
இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுகுறித்து அதிமுக தனது X பக்கத்தில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக்குடன் பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதன் மூலம் மோடி, அமித்ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜக-வின் தேசிய தலைவர்கள் வந்தாலும் அல்லது அண்ணாமலையை மாற்றினாலும் கூட்டணி இல்லை என்ற தீர்மானமான முடிவுக்கு அதிமுக வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.