பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக பாஜக-வைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுக -பாஜக கூட்டணி தமிழகத்தை ஆளும் திமுக-வை எதிர்த்து வேகமாக செயல்பட முடியாத நிலை இருந்துவந்தது.
இந்த நிலையில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே உரசல் தொடர்ந்து வந்த நிலையில் அண்ணா குறித்து மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசிய விவகாரம் தமிழ்நாட்டு மக்களை மட்டுமன்றி அதிமுக தொண்டர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இன்று நடைபெற்ற அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக – பாஜக இடையிலான இந்த கூட்டணி முறிந்ததை அடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுணங்கிப் போயிருந்த தமிழக அரசியலில் மீண்டும் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.