டெல்லி: பெண்களுக்கு 33சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,. நீதித்துறையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் முன்னாள் தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி (செப்டம்பர், 2023) தொடங்கியது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 19ந்தேதி பாராளுமன்ற புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற அவைகள் நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்தது. பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்ல்வால் தாக்கல் செய்தார். இதன்மீதான விவாதம் மக்களவையில் 20ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப் பில், 454 எம்.பி-க்கள் ஆதரவாகவும் 2 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 20ந்தேதி மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. இதனை தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையை பெண்களுக்கு இடஒதுககீடு மசோதா பெற்றுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக்கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவரும், பார் கவுன்சில் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு சுதந்திரம் பெற்ற பின், இதுவரை, 270 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். இதில், 11 பேர் மட்டுமே பெண்கள்; இது நியமனத்தில் 4சதவீதமாக மட்டுமே உள்ளது. நீதித்துறையில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்தவம் அளிக்கப்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.
நாட்டில், 25உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இதில் பாட்னா, உத்தரகண்ட், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட நியமிக்கப்படவில்லை. மீதமுள்ள, 20உயர் நீதிமன்றங்களில், 670ஆண் நீதிபதிளும், 103 பெண் நீதிபதிகளும் உள்ளனர்.
எனவே, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீட்டு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை போல, நீதித்துறையிலும், பெண் நீதிபதிகள் நியமனத்தின், 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் வலியுறுத்தி உள்ளார்.