சென்னை: தமிழ்நாட்டில், தென்மேற்குப் பருவமழை விலகுவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்வது நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென்மேற்கு பருவமழை காலத்திலும் ஓரளவுக்கு மழை பெய்தது. இந்த காலக்கட்டத்தில், பல்வேறு வட மாநிலங்களில் பெய்த கனமழை கடும் சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தென் மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை விலகுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே — குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபரில் தொடங்க உள்ள நிலையில், செப்டம்பர் 25 முதல் தென்மேற்குப் பருவமழை விலகுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், தென்மேற்குப் பருவமழையானது கடந்த ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி படிப்படியாக ஜூலை 8ஆம் தேதி இதர மாநிலங்களுக்கும் முழுமையாக பரவியது. இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்தமாக பருவமழை விடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பருவமழைக் காலத்தில், இந்தியாவுக்க 780.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், இயல்பான அளவு 832.4 மி.மீ. என்றும் குறிப்பிட்டுள்ளது.