சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கை திமுக அரசு மீண்டும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல சாட்சிகள் தற்போது பல்டி அடித்து பேசி வருகின்றன. அதன்மூலம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, திமுக அரசு திட்டமிட்டு பழிவாங்க முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதை ஊர்ஜிதம் செய்வதபோல் சமீப கால நடவடிக்கைகள், சிலரின் பேட்டிகள் தெரிகின்றன. மேலும் அமைச்சர்களும், எடப்பாடி மீது மறைமுகமாக குற்றம்சாட்டி பேசி வருகின்றனர்.
சமீபத்தில் சனாதனம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் உயதநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த உயதநிதி ஸ்டாலின், சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பேச தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தன்னை தொடர்புப்படுத்தி பேசியதாக கூறி ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்கக்கோரியிருந்தார். அத்துடன், கோடநாடு வழக்கில் தன்னிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தியதில்லை என்றும் இபிஎஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிப்பட்ட முறையில் அவதூறாக இருந்தால், மேற்கொண்டு பேச தடை விதிக்க முகாந்திரம் உள்ளது என கூறிய நீதிபதி, எடப்பாடி குறித்து விமர்சிக்க இடைக்கால தடை விதித்ததுடன், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இரு வாரங்களுக்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.