சென்னை: தமிழ்நாட்டில் ஷவர்மா சாப்பிட்டு, சிறுமி உயிரிந்த நிலையில், தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கலில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் , மாநிலம் முழுவதும் உள்ள உணவங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தம்பதி தங்களது இரு குழந்தைகளுடன், கடந்த கடந்த 16ஆம் தேதி இரவு நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கி வந்து, ட்டில் வைத்து சாப்பிட்டுள்ளனர். ஹோட்டல் உணவை சாப்பிட்ட சற்று நேரத்திலேயே கலையரசி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து, மேலும், சிறுமியின் தாய் சுஜாதா, அவரது மாமா, அத்தை உள்ளிட்ட அனைவருமே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி கலையரசி, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதுபோல அதே ஓட்டலில் கடந்த 16 ஆம் தேதி இரவு ஃபிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், 9ம் வகுப்பு மாணவியான கலையரசி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான செய்திகள் வைரலான நிலையில், உணவங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களையும் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறும், உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? உள்பட அனைத்து நெறிமுறைகளையும் கண்காணிக்குமாறும், அரசு விதிகளை பின்பற்றாமல் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.