சென்னை: அக்டோபர் 1ந்தேதி முதல் பத்திரப்பதிவு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், பத்திரப்பதிவின்போது, சொத்துகளின் புவி அமைப்புத் தகவல் அடங்கிய புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும் என பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த போலி பத்திரப்பதிவுகளுக்கு முடிவுகட்டும் வகையில் தமிழ்நாடு அரசு, போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தத்த்தை கொண்டு வந்ததது. அதற்கு கவர்னர் மற்றும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள், மத்திய, மாநில சட்டங்களின்படி தகுதியான அதிகார அமைப்பு, நீதிமன்றம், தீர்ப்பாயம் என இவற்றால் நிரந்தரமாக, தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள அசையா சொத்தை விற்பனை, கொடை, குத்தகை அல்லது வேறு வகையில் உரிமை மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்க வேண்டும்.
அதேநேரம் பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும், இந்த பத்திரப்பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில்கொண்டு ஆவணப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. அதேநேரம், பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்
களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
இதையடுத்து சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பை உயர்த்திய தமிழ்நாடு அரசு தற்போது, பத்திரப்பதிவின்போது, சொத்துகளின் புவி அமைப்புத் தகவல் அடங்கிய புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும் என பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதி அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் அக்டோபர் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், பதிவு ஆவணங்களில் சொத்துகளின் புவி அமைப்புத் தகவல் அடங்கிய புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வணிகவரி, பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், பதிவுத் துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கவும், அரசுக்கு உரிய வகையில் வருமானம் வருவதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கட்டடங்கள் இருப்பதை மறைத்து, காலி நிலம் என்று ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால், அரசுக்கு வரக்கூடிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, காலி மனையிடங்களை புகைப்படம் எடுத்து அவற்றை ஆவணமாக இணைக்க வேண்டுமென ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் அருகில் இருக்கக்கூடிய காலியிடத்தை புகைப்படம் எடுத்து, அதை ஆவணமாகச் சோ்த்து மோசடியாகப் பதிவுகள் நடைபெறுவதாக புகாா்கள் வந்துள்ளன. எனவே, அது குறித்து தீவிரமாக ஆராய்ந்து புதியதொரு முடிவை அரசு எடுத்துள்ளது. அதன்படி, சாா் பதிவாளா் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடா்பான ஆவணங்களிலும் அந்தச் சொத்துகள் குறித்த புவி அமைப்புத் தகவல்கள் அடங்கிய புகைப்படம் (ஜியோகோ ஆா்டினேட்ஸுடன்) எடுக்கப்பட்டு, அதை ஆவணமாக இணைக்க வேண்டும்.
இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத் துறை தலைவரால் தனியாக வழங்கப்படும்.
இந்த நடைமுறை அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.