சென்னை: சென்னை மாநகராட்சியில் முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மிதப்பதை தடுக்க திமுக அரசு 2021ம் ஆண்டு பதவி ஏற்றதும் முன்னுரிமை கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி.மீ நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 300 கி.மீ நீளத்திற்கு மேல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும், இந்தாண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தொடங்கப்பட்டு இரு ஆண்டுகள் ஆன நிலையில், பெரும்பாலான இடங்களில் இன்னும் பணிகள் முடிவடையாத நிலை தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சாலை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முடிவு பெறுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இநத் நிலையில், சென்னை மாநகராட்சியில் முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், முன்னுரிமை அடிப்படையில் வடிகால் பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தரமாக முடிக்கவேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், வடிகாலில் வண்டல் வடிகட்டியை கட்டாமலும், சாலையை சீரமைக்காமலும் விட்டுவிடுவதாக ஒப்பந்ததாரர்கள் மீது புகார் எழுந்தது. பணிகள் நிறைவுபெற்றப் பின் அங்குள்ள கட்டுமான கழிவுகள் மற்றும் சகதிகளை கட்டாயம் அகற்றவேண்டும் எச்சரித்துள்ள மாநகராட்சி, சுற்றறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் முடித்தால் மட்டுமே ஒப்பந்த தொகை முழுமையாக விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன், பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயம் அமைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.