இங்கிலாந்து அரசர் சார்லஸின் முதல் மனைவி டயானா 1997ம் ஆண்டு சர்ச்சைக்குரிய கார் சேசிங் விபத்தில் தனது 36 வயதில் அகால மரணம் அடைந்தார்.
வரலாற்றில் மறக்க முடியாத பேஷன் ஐகான்-களில் ஒருவராக வலம்வந்த இளவரசி டயானாவின் மரணத்துக்குப் பிறகு குறிப்பாக ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் அவரைப் பற்றிய பதிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தவிர, இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்திற்கு வருவதும் அவை அதிக விலைக்கு ஏலம் போவதும் சமீப ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் வார்ம் அண்ட் வொண்டர்ஃபுல் (Warm & Wonderful) என்ற பிரிட்டிஷ் ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்து இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலத்திற்கு வந்தது.
1981 ம் ஆண்டு இளவரசர் சார்லஸுடன் கோல்ப் போட்டி ஒன்றுக்கு வந்த டயானா இந்த சிகப்பு நிற ஸ்வெட்டரை அணிந்திருந்தார்.
வரிசையாக வெள்ளை நிற ஆடுகள் படம் போட்ட இந்த ஸ்வெட்டரில் ஒன்று மட்டும் கருப்பு நிறத்தில் (black sheep) இருந்தது அப்போது பேசுபொருளாக இருந்தது.
அரச குடும்பத்தைச் சாராத இளவரசி டயானா-வுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் எந்த இடம் இருந்தது என்பதை உணர்த்தவே இப்படி ஒரு black sheep ஸ்வெட்டரை அவர் அணிந்திருந்ததாக அவர் மீது அன்பு கொண்டிருந்த அந்நாட்டு மக்கள் கூறிவந்தனர்.
1983 ம் ஆண்டு மற்றொரு நிகழ்ச்சியில் இந்த ஸ்வெட்டரை டயானா மீண்டும் அணிந்ததை அடுத்து இதில் ஓட்டை விழுந்ததாகவும் அதை சரிசெய்தோ அல்லது மாற்றிக்கொடுக்கவோ கூறி வார்ம் அண்ட் வொண்டர்ஃபுல் நிறுவனத்துக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
50,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய இந்த ஸ்வெட்டரை பிரபல ஏல நிறுவனமான Sotheby’s ஏலத்திற்கு கொண்டுவந்தது ஆகஸ்ட் 31 வரை 2 லட்சம் அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே ஏலம் கேட்கப்பட்டிருந்தது.
இறுதியாக 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது இது இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்.
இதற்கு முன் டயானா அணிந்த ஊதா நிற கவுன் 4.9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே இதுவரை டயானா பயன்படுத்திய பொருட்களில் அதிக விலைக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.