சென்னை: நடிகை விஜயலட்சுமி பாலியல் விவகாரம் தொடர்பான காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராவதாக சீமான் அறிவித்து உள்ளார். தன்னிடம் விசாரணை நடத்தும்போது, விஜயலட்சுமி, வீரலட்சுமியும் இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவரான நடிகரும், இயக்குனருமான சீமான் மீது, அவரது முதல்மனைவி விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொடுத்த புகார்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த வாரம் மீண்டும் சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, புகாரை பெற்ற காவல்துறையினர், முதல்கட்டமாக விஜயலட்சுமியிடன் விசாரணை மேற்கொண்டதுடன், அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தினார்.
விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினர். மேலும் அவர் ஆஜராக மறுத்தால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், சீமான் காவல்துறையினரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மதம் தெரிவித்து உள்ளார். இன்று காலை வளசரவாக்கம் போலீசார், பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்று சம்மன் வழங்க சென்றபோது, சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்துவிட்டது.
சீமான் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், அவர் காவல் நிலையத்திற்கு வந்து சம்மனை பெற்றுக்கொண்டு மற்றொரு தேதியில் நேரில் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக சீமான் அளித்துள்ள விளக்கத்தில், “நான் காவல்துறையின் விசாரணைக்கு நேரில் வரும்போது என் மீது புகார் கொடுத்த விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் எதிரே நிற்க வேண்டும் என கூறினார். மேலும் அவர், நான் ஒரு பக்கம் விசாரணைக்கு அழைக்கப்படுகிறேன், அவர்கள் மற்றொரு பக்கம் வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் குற்றச்சாட்டில் எந்த உண்மையும், அடிப்படையில் இல்லை. கட்சி நிகழ்வுகள் உள்ளிட்ட பயண திட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியம். அதனால், ஒரே நாளில் ஒரே நேரத்தில் மூவரையும் வைத்து விசாரணை நடத்தி புகாரின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.