பிஜேபிக்கு வாக்கு பிரம்மாஸ்திரமாக திகழ்ந்தது ராமர்கோயில் கட்டும் விவகாரம்தான். அது கால ஓட்டத்தில் நீர்த்துப்போய்விட்டது. அடுத்ததாக, மோடி தன்னை முன்னிலைப்படுத்தி தேசியம், தேசப்பற்று மற்றும் ஹை டெக் பேச்சு ஆகியவற்றை ஓட்டு வங்கி அஸ்திரமாக எடுத்துக்கொண்டார். அது அவருக்கு வெற்றியைத் தந்தது.
ஆனால், சமீப காலமாக பிஜேபியின் மவுசு சரிய தொடங்கியது. பீகார் முதலான மாநில தேர்தல்களில் பிஜேபி வெற்றியை இழந்தது. இந்தத் தோல்விகளை மறக்க செய்யவும் வரும் 2019 பொது தேர்தல்வெற்றியை கருத்தில் கொண்டும் மோடி பெரிதும் நம்பும் ஓட்டுவங்கி – பிரம்மாஸ்திரமாக நினைப்பது – தேசியம், தேசபற்றைதான். அவர், அதை கையில் எடுத்த நாள் முதலாய்தான் நாட்டில் ஆங்காங்கே நிறைய சலசலப்புகள் நடக்க ஆரம்பித்துவிட்டன.
ஆனால் பல்கலை மாணவர்களின் போராட்டங்கள் அந்த ஓட்டு வங்கி பிரம்மாஸ்திரத்தை செயல் இழக்கச்செய்யும் பணியை கச்சிதமாக செய்து வருகின்றன. … குறிப்பாக ஹைதாராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் எழுச்சிகள்!
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா கைது ஆகிய விவகாரங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தவறான தகவலைக் கூறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சீற்றம் அதிகரித்தது. அமளி ஏற்பட்டது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர் ரோகித் வெமுலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இரவு பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் “மாணவர் ரோகித் வெமுலா இறந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க முயற்சி செய்தனர். இதற்காக அவரது உடலைப் பார்க்க டாக்டர்களையோ, காவல் துறையினரையோ மாணவர்கள் அனுமதிக்கவில்லை.. மாணவரின் உடலை இரவு முழுவதும் ஒளித்து வைத்தனர். மாணவர் ரோகித் வெமுலா இறந்த மறுநாள் காலை 6.30 மணிவரை டாக்டர்கள் மற்றும் காவல்துறையினரை உள்ளே செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகுதான் டாக்டர்களும் காவல்துறையினரும் உள்ளே செல்ல முடிந்தது. இந்தத் தகவலைத் தெலுங்கானா காவல்துறையினர் அறிக்கையாக கொடுத்துள்ளனர்” என்றார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்த பல்கலைக் கழக மருத்துவமனை டாக்டர் ராஜ், “மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தை அரசியல் ஆக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஜனவரி 17ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மாணவர் ரோகித் வெமுலா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே நான் பல்கலைக்கழக விடுதிக்கு விரைந்து சென்றேன். அப்போது மாணவரின் உடலை கட்டிலில் தூக்கி கிடத்தியிருந்தனர். அவரது உடலை நான் பரிசோதித்தபோது அவர் இறந்து 2 மணி நேரம் ஆகியிருந்தது,” என்று விளக்கினார்.
அடுத்ததாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துகூறியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. எதிர்க் கட்சிகள் கையில் எடுத்திருக்கும் பல்கலைக்கழகங்களில் இரண்டு சமீபத்திய சம்பவங்கள் மனித வளங்கள் அமைச்சர், ஸ்மிருதி இரானிக்கும் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் பெரும் சிக்கலையும் களங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
மாணவர் சங்கத்தின் தலைவர் , கன்ஹையா குமார் உட்பட, தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், தேசத்துரோகம் செய்ததாக கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல்குருவின் நினைவுநாளை அனுஷ்டித்தார்கள் என்று அவர்கள் மீது தேசதுரோக வழக்கு போட்டது பி.ஜே.பி. அரசு.
இந்த நிலையில் இந்த மாணவர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் அரண் அமைத்து காக்க முற்பட்டன எதிர்காட்சிகள். பிஜேபிக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் பல நகரங்களில் நடைபெற்றன. மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு காஷ்மீரி பேராசிரியரும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
:2,000 சாராய பாட்டில்கள் 3000 ஆணுறைகள் ஒவ்வொரு நாளும் பல்கலை வளாகத்தில் காணப்படுகின்றன” என்று கூறி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சீண்டியது மத்திய அரசு. இதை மாணவர்கள் கண்டித்தனர்.
மாணவர்கள் சாட்சியளித்த ஏழு வீடியோக்கள் இரண்டு திருத்தப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் குமார் மற்றும் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.
இந்திய வரைபடத்தை சேதப்படுத்தியது இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியது போன்ற செயல்களை மாணவர்கள் செய்துவருவதாக குற்றம் சாட்டியது மத்திய அரசு. ; மார்ச் 2 ஆம் தேதி டில்லியில், பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தது போலீஸ்.
அப்சல் குரு வை ஆதரிப்பதாக பல்கலைமாணவர்கள் மீது குற்றம் சுமத்தி, தனது தேசப்பற்றை வெளிஉலகத்திற்கு காட்டிக்கொள்ள பிஜேபி அரசு முயற்சிவருகிறது. அதன் வெற்றி, தோல்வி காலத்தின் கையில்தான் இருக்கிறது.