அமராவதி: ஊழல் வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் குதித்த்துள்ளதுடன், இன்று முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில்ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அவர் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் வன்முறையும் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு செப்டம்பர் 22ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க கோரி அவருடைய வக்கீல் விஜயவாடா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சந்திரபாபு நாயுடு தரப்பு வக்கீல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிமன்றம் அவருடைய பொது வாழ்க்கை, வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுகளை வழங்கவும், மருந்து மாத்திரைகளை அனுமதிக்கவும், சிறையில் தனி அறை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், தேலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடுவை சட்டவிரோதமாக கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி ரீதியாகவும், ஜெகன் ரெட்டியின் கோஷ்டி அரசியலுக்காகவும் 11.09.2023 திங்கட்கிழமை ஆந்திரா மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேன, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே ஆந்திர மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குப்பம் தொகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனிடையே சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சந்திரபாபு நாயுடு கைது, அதனையடுத்து நடைபெறும் பந்த் காரணமாக ஆந்திராவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, கொண்டாட்டங்கள், கூட்டமாக சேர்வது போன்றவற்றிக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு தனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக சிறைக்கு செல்கிறார். 14 ஆண்டுகள் ஆந்திர முதல்வராகவும், 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் சந்திரபாபு நாயுடு இருந்துள்ளார்.