சென்னை
மருத்துவர்கள் மக்களிடம் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற வேண்டும் எனத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
நேற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
”உடல் நலத்தைப் பாதுகாக்க விளையாட்டில் ஈடுபடுவது எவ்வளவு முக்கியம் என்பதை மற்றவர்களை விட மருத்துவ மாணவர்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். மருத்துவ மாணவர்களும் சரி மருத்துவர்களும் சரி உங்களைப் பார்க்க வருபவர்களிடம் நீங்கள் கூறும் முதல் அறிவுரை “தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்” என்பதாகத் தான் இருக்கும். முன்பு எல்லாம் 50 வயதுக்கு மேல் உள்ளவங்கதான் பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் நடைப்பயிற்சி போவார்கள். இப்ப அந்த மாதிரி இல்லை. இளம் வயதில் இருக்கிறவர்கள் கூட அதிகமாக ஓட்டம்-நடை-சைக்களிங் போகிறார்கள். அந்த அளவுக்கு எல்லோருக்கும் உடற்பயிற்சி மீது அக்கறை வர மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களுமே காரணம்.
விளையாட்டுப் போட்டிகள் மீது உங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவுக்கு நம் முதல்வருக்கும் ஆர்வம் உண்டு. அதனால் தான் விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்தி நாம் முன் வைக்கும் அத்தனை கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றித் தருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உங்கள் அனைவரிடமும் நான் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். சமீபகாலமாக மாரடைப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், 25-30 வயதுக்குள்ளவர்கள் கூட மாரடைப்பால் உயிர் இழக்கின்றனர்.
மருத்துவ மாணவர்கள்-பயிற்சி மருத்துவர்கள்-செவிலியர்கள் என்ற முறையில் நீங்கள் தினமும் நூற்றுக்கணக்கான மக்களைச் சந்திப்பீர்கள். அவர்கள் அனைவரிடமும் உடல் நலத்தைப் பேணிக்காப்பதன் அவசியத்தையும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். ஏதாவது ஒரு விளையாட்டுப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும்.”
என்று உரையாற்றி உள்ளார்.