டில்லி

வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஜி 20- மாநாட்டில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் பாரதம் எனப் பெயர் உள்ளதால் சர்ச்சை உண்டாகும் என கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியின் பெயர் இந்தியா (I.N.D.I.A.) என்று வைக்கப்பட்டுள்ளது.. பாஜக இதனைத் தொடர்ந்து விமர்சித்து வருவதுடன் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கத் தொடங்கியது.

இன்று இரவு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து வழங்க உள்ளார். இந்த அழைப்பிதழில் இந்தியாவின் பெயர் ‘பாரதம்’ என்று மாற்றப்பட்டது. காங்கிர்ச் இந்த அழைப்பிதழைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தது.

மத்திய அரசு நாட்டின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான வேலைகளைத் தொடங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.  வருகிற 18 ஆம் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.

டில்லியில் இன்று தொடங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, பாரதத்தின் பிரதமராகத் தன்னை அடையாளப்படுத்தினார். அவரது இருக்கையில் அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாகப் பாரதம் என எழுதப்பட்டிருந்தது.

இந்தியாவா, பாரதமா? என்ற வாதத்திற்கு, இந்த பெயர்ப் பலகை மூலம், மத்திய அரசு சூசகமாகப் பதில் அளித்திருப்பதாக பேசப்படுகிறது. இந்தியாவா? பாரதமா? என்ற விவாதம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.மோடியை சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

ஜி 20 மாநாடு தொடர்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் பாரதம் என்ற பெயர் உள்ளது. அந்தக் கையேடு “பாரதம் ஜனநாயகத்தின் தாய்” என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது.  அந்த புத்தகத்தில் “பாரதம் என்பது நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர். இது அரசியலமைப்புச் சட்டத்திலும், 1946-48 விவாதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்னும் 2  நாட்களுக்குள் இந்தியாவா அல்லது பாரதமா என்னும் சர்ச்சை டிரெண்டிங் ஆகும் என கூறப்படுகிறது.