சென்னை: நாம் தமிழர் கட்சி தன்னுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், அதன்மூலம் தான் 7முறை கருத்தரித்து, கருக்கலைப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டிய நடிகை விஜய லட்சுமிக்கு கருக்கலைப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமண மோசடி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, கடந்த 2008-ல் சீமான் மதுரையில் தம்மை திருமணம் செய்து கொண்டார் என்றும், 2011-ல் பணம் ,நகைகளை பறித்துக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அத்துடன் 7 முறை சீமான் தம்மை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பது உள்ளிட்ட ஏராளமான புகார்களை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்திருந்தார். மானங்கெட்ட ஒருத்தியோடு சண்டையா? என கேள்வி எழுப்பியதுடன், அரசியல் காரணங்களுக்காக தம்மை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பிவிடுவதற்காக இந்த புகார்கள் தெரிவிக்கப்படுவதாகவும் சீமான் பதில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக, சென்னை போலீசார், விஜயலட்சுமியை வரவழைத்து சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். சீமான் மீது தெரிவித்த புகார்களுக்கான ஆதாரங்களையும் போலீசார் விஜயலட்சுமியிடம் பெற்றனர். பின்னர் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சீமானை காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், சாதாரண டிவிட்டுக்கே பாய்ந்து சென்று இரவோடு இரவாக கைது செய்யும் காவல்துறை, சீமான் விவகாரத்தில் மவுனம் சாதித்து வருகிறது.
இந்த நிலையில், விஜயலட்சுமி கூறியபடி, கட்டாய கருக்கலைப்பு உண்மைதானா? என்பது குறித்து, அவரை இன்று பெண் போலீசார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனை அளிக்கும் மருத்துவ சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன்பிறகே சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.