சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது வழக்குகள் பதிய அனுமதி கோரி ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில், சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும், சனாதானத்தை ‘டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ எனக் கூறி இருந்தார்.
உதயநிதியின் பேச்சு நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் உள்பட பலர் கடிதம் எழுதி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் இன்று @BJP4Tamilnadu மூத்த தலைவர்கள், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர் என்று பதிவிட்டுள்ளார்.