கோவை

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிரான பேச்சு கோவையில் திமுக மற்றும் பாஜக இடையே சுவரொட்டி யுத்தத்தை உருவாக்கி உள்ளது.

அண்மையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் ன் பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் அது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. மேலும் வீட்டு படிக்கட்டைத் தாண்டக் கூடாது எனப் பெண்களை அடிமைப்படுத்தியது.

ஆகையால் கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும்.  அவற்றைப் போல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம் என்று பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பா.ஜ.க. சார்பில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு விவகாரத்தில் கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் இடையே சுவரொட்டி யுத்தம் ஏற்பட்டு உள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் ஒரு தரப்பினரைத் தாக்கும் வகையில், மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் சுவரொட்டிகளை ஒட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில், போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம் என்ற வாசகங்கள் காணப்படுகின்றன. பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில், சனாதனம் எங்கள் உயிர்மூச்சு என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

கோவையில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.