டெல்லி: ”இந்தியா பெயரை பாரதம் என மாற்றுவது தொடர்பாக வெளியாகும் செய்திகள் எல்லாம் வதந்தியே” , இதுதொடர்பான விமர்சனம் எதிர்க்கட்சிகளின் மனநிலையை காட்டுகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தொடர்பான அறிவிப்புகளில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என வெளியானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த மாதம் கூட இருக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில், இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. நாடு முழுவதும் இந்த தகவல்களை பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாரத் தொடர்பான கேள்விகளுக்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே. ஆனால், இந்த செய்திகள் ‘பாரத்’ என்ற பெயரைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது.
அரசின் அழைப்பிதழ்களில் பாரதம் என குறிப்பிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இதற்கு முன்பும் பாரத அரசு என்ற பெயரில் பல அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. நான் பாரத அரசின் அமைச்சர். பல செய்தி நிறுவனங்களின் பெயரில் பாரத் என்று உள்ளது.
பாரதம் என்ற பெயரையே விரும்பாத இவர்கள் யார்? இவர்கள் ஏன் பாரதத்தை எதிர்க்க வேண்டும்? பாரதம் என்ற பெயரை எதிர்ப்பது யார்? என சரமாரியாக கேள்வி எழுப்பியவர்கள் தேசத்தின் முன் கட்சியை வைத்து அரசியல் என்ற புதைமணலில் சிக்கியவர்கள். இவர்கள்தான் பாரதத்தை எதிர்க்கிறார்கள். பாரதம் என்று குறிப்பிட்டால் கூட வலியை உணர ஆரம்பித்து விட்டீர்கள் என்றவர், வெளிநாட்டு மண்ணில் இருந்து நாட்டைக் கேவலப்படுத்த முயற்சித்ததும் இவர்கள் தான் என கடுமையாக சாடினார்.
1 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், எதிர்க்கட்சிகள்தான் தங்கள் கூட்டணியை UPA என்று அழைப்பதை நிறுத்திவிட்டன. ஆனால் அவர்கள் மறந்து விடுகிறார்கள், அவர்கள் UPA என்ற பெயரை துறந்தாலும், முகங்கள், குணம் மற்றும் நடத்தை ஒரே மாதிரியாக இருக்கும். பெயரை மாற்றுவதால் உங்கள் செயல்கள் மாறாது. இந்த ஊழல் கூட்டணி, ஆணவம் நிறைந்த கூட்டணியை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது” எனவும் காட்டமாக விமர்சித்தார்.