டெல்லி: சனாதனம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில்,டெல்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து பலர் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு பேசிய இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்ச், மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது அதேபோன்று தான் சனாதனமும். அதை எதிரிக்கக் கூடாது, ஒழிக்க வேண்டும். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது. எதுவுமே நிலையானது கிடையாது. அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட், திமுக என ஸ்டாலின் பேசினார்.
உதயநிதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல மாநிலங்களில்6 உள்ள இந்து மகாசபை உட்படப் பல்வேறு மத அமைப்புகளும் பாஜக போன்ற அரசியல் கட்சிகளும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
உதயநிதியின் இந்தப் பேச்சை தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் திமுக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை மலேரியாவுடனும் டெங்கு உடனும் தொடர்புபடுத்திப் பேசுகிறார். அதை வெறுமனே எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும் என்பது அவர் கருத்து. சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார். எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய உறுப்பினராகவும் காங்கிரஸின் நீண்ட கால கூட்டாளியாகவும் திமுக உள்ளது. இதுதான் மும்பை சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
உதயநிதி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பிரபல வழக்கறிஞரும், சமூக சேவகருமான வினித் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், இந்தியாவின் 80 சதவிகிதம் பேர் சனாதன தர்மத்தில் நாட்டம் கொண்டவர்கள். இவர்களை இனப்படுகொலை செய்யத் தூண்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அமைந்துள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 153ஏ, 295, மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.