சென்னை: தமிழ்நாட்டில் இந்து கோவில்களுக்கு சொந்தமான 5,538 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 25 மாதங்களில் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
ஒரு காலத்தில் வீடு, நிலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருந்தது. பாண்டு, பத்திரமில்லாம் வாய்மொழியாகவே பல விவகாரங்கள் நடந்த காலமும் உண்டு. ஆனால் தற்போது ஒருவர் பெயரில் உள்ள அசையா சொத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் மோசடி அதிகரித்துள்ளது. சமீப ஆண்டுகளாக, இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், போலி பட்டாக்கள் மற்றும் ஆவணங்களைக்கொண்டு, அதிகாரிகள் துணையுடன் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
கோவில் சொத்துக்களை எந்த ஒரு தனிநபருக்கும் விற்பனை செய்ய முடியாது என்று சட்டம் உள்ள நிலையில், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் துணையுடன், கோவில் சொத்துக்கள் தனி நபர்கள் பெயர்களில் மாற்றப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் உள்ளன.
தமிழகத்திலுள்ள சேர, சோழ, பாண்டிய, பல்லவ உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 4,78,283 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் பல உபயோகமின்றி கிடக்கிறது. அதிகாரிகள் முறையாக பராமரிக்காமலும், அதன்மூலம் கோவிலுக்கு வாடகை வரும் வகையில் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே போடப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து கண்காணித்து வரும் சமூக விரோதிகள், அதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, பின்னர் போலி போட்டா மூலம் தங்களதாக்கி வருகின்றனர். பலர் அதிகாரிகள் துணையுடன் தங்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கோயில் நிலங்களை பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை ண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இதனால் இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது. அதை ஏற்று, தமிழ்நாடு அரசும், கோயில் நிலங்கள், கட்டிடங்களை ஆக்கிரமித்தால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் வகையில் அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறி வருகிறது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கோயில் செயல் அலுவலர்கள், ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கோயில் நிலத்தை சட்ட விரோதமாக நிலக்கிரயம் செய்யப்பட்டிருக்கும் இனங்கள், மூன்றாம் நபர் அனுபவத்தில் உள்ள இனங்களை கண்டறிந்து வருகிறார்கள். கோயில் அலுவலர்கள் அறநிலையத்துறைக்கு இக்குழுக்கள் சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்த கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்பதற்கான அதன் சிறப்பு இயக்கத்தின் மூலம் இந்து சமய அறநிடிலயத்துற துறை, 25 மாதங்களில் 5,538 ஏக்கர் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.
மீட்கப்பட்ட கோவில் நிலங்களை வருவாய் ஆதாரங்களாக மாற்றுவதையும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக அறநிலையத்துறை கொண்டுள்ளது என்றும், காஞ்சிபுரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.1,712 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து சென்னையில் ரூ.918 கோடி மதிப்புள்ள சொத்துகளும், கோவையில் ரூ. 503 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் மீட்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.