சென்னை: அரசியல்வாதிகள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக, அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய வழக்குகளை மீண்டும் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கீழ்கோர்டுகளால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளார். அதே வரிசையில், முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம்  தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்து உள்ளது.

ஓபிஎஸ் கடந்த  2001 முதல் 2006 ஆண்டுக்கு இடையே  அமைச்சராக பதவி வகித்தபோது,   வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.73 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது 2006 திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு பன்னீர்செல்வத்தை விடுதலை செய்தது.  இதையடுத்து அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறார். இதே நீதிபதிதான் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.