காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மேற்கொண்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (Air Quality Life Index – AQLI) ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரமாக உருவெடுத்துள்ள டெல்லியில் வாழ்பவர்கள் தங்கள் ஆயுளில் 11.9 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.
காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தையும், வங்கதேசம் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
பங்களாதேஷில் ஒரு சராசரி குடிமகன் தனது வாழ்நாளில் 6.8 ஆண்டுகளை காற்று மாசுபாட்டால் இழக்கிறான். நேபாளம் மூன்றாவது இடத்தையும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் மங்கோலியாவும் உள்ளன.
உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள PM2.5 ஆண்டு சராசரி தரநிலைகளின் அடிப்படையில், குர்கானில் 11.2 ஆண்டுகள், ஃபரிதாபாத்தில் 10.8 ஆண்டுகள், ஜான்பூரில் (உத்தரபிரதேஷ்) 10.1 ஆண்டுகள் லக்னோ மற்றும் கான்பூரில் தலா 9.7 ஆண்டுகள், பாட்னாவில் 8.7 ஆண்டுகள் என இந்தியாவின் பல பகுதிகள் காற்று மாசுபாட்டின் காரணமாக ஆயுட்காலம் குறைந்து வருவதைக் காட்டுகிறது.
இந்தியாவின் மக்கள் தொகையில் 67.4 சதவீதம் பேர் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
ஆயுட்காலம் அடிப்படையில் அளவிடப்படும் போது, துகள் மாசுபாடு இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, இருதய நோய்களால் சராசரி ஆயுட்காலம் சுமார் 4.5 ஆண்டுகள் குறைகிறது என்று தெரிவித்துள்ளது.
“காற்று மாசுபாட்டின் காரணமாக ஆயுட்காலத்தின் மீதான தாக்கம் உலகளவில் முக்கால் பங்கு பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய ஆறு நாடுகளில் நிகழ்கிறது. இங்கு வாழும் மக்கள் தாங்கள் சுவாசிக்கும் காற்றினால் தங்கள் வாழ்நாளில் ஒன்று முதல் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இழக்கிறார்கள்” என்று பேராசியரும் ஆராய்ச்சியாளருமான மைக்கேல் கிரீன்ஸ்டோன் கூறியுள்ளார்.
அதேவேளையில், 2013 ம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக சராசரியாக 4.7 ஆண்டுகளை இழந்த சீனர்கள் தற்போது 2.5 ஆண்டுகளை மட்டுமே இழக்கிறார்கள். காற்று மாசுபாட்டை குறைக்க சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக இந்த மாற்றத்தை கண்டுள்ள சீனா-வில் இந்த சராசரி விரைவில் 2.2 ஆண்டாக குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.