சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, ம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவிட்டு உள்ளார்.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றமும், அமர்வு நீதிமன்றமும் மாற்றி மாற்றி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நெஞ்சுவலி என கூறி தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை, எம்.பி., எம்எல்எக்கள் மீதான வழக்கை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இனிமேல் விசாரணைக்க காணொலி காட்சி வாயிலாக ஆஜராகலாம் என கூறப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறியதுடன், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தியது.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி அல்லியிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டிருந்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, இந்த ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றமே ஜாமின் மனுவை விசாரிக்கும் என அறிவித்துள்ளதால், ஜாமின் மனுமீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.