டெல்லி: தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை பணிகளில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில்,  தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு “உற்பத்தி மையம்” ஆக செயல்படுகிறது. நாட்டிலேயே கடைசி இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனம், பொதுமக்களின் அஜாக்கிரதை மட்டும் ஆர்வமின்மையால் தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது.

“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்’ என்றார் திருவள்ளுவர். புறந்தூய்மை நீரால் அமையும் என்பதில் உடல் சுத்தமல்லாது சுற்றுச்சூழலின் சுத்தத்தையும் அவர் வலியுறுத்துகிறார். சுற்றுச்சூழலின் சுத்தத்தைப் பேணிக் காப்பதில் மழைக்குப் பெரும் பங்குண்டு என்பதாலேயே புறந்தூய்மை நீரால் அமையும் என்று பரந்த நோக்கில் படைத்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

 “சுத்தம் சோறு போடும்’ என்பது தமிழ் பழமொழி. இதை ஒவ்வொருவரும் தங்களது ஆரம்ப காலத்தில் இருந்து கேட்டு வந்திருப்பார்கள். முன்பெல்லாம் பள்ளிகளில் இவை போதிக்கப்பட்டு வந்தது.  சுத்தமாக இருந்தால் சோற்றைப் போட்டுத் உண்ணலாம். இல்லாது போனால் அந்த அசுத்தம் தரும் நோயில் கஞ்சியைக் குடித்துதான் உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டி வரும்.  இதை தவிர்க்கவே சுத்தம் சோறு போடும் என பெரியோர்கள் கூறினார்கள்.  ஆனால், நவீன காலத்தில், இதையெல்லாம் போதிக்க ஆசிரியர்களும் இல்லை, அதை கேட்க மாணாக்கர்களும் இல்லை. இதனால்தான் நாட்டின் விதவிதமான நோய்கள் பரவி, மக்களை பாதித்து வருகிறது.     பெரும்பான்மையான நோய்கள் அசுத்தத்தோடு தொடர்புடையது என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

நாம் வசிக்கும் இடம், சுற்றுவட்டார பகுதிகளை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க கடந்த 2024ம் ஆண்டு பிரதமர் மோடி சுவாச் பாரத் அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த பணியானது, கழிப்பறைகள் கட்டுவதன் மூலம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான 2019 அக்டோபர் 2ஆம் தேதிக்குள் ” திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ” (ODF) இந்தியாவை அடைவதை நோக்கமாகக் கொண்டது.  இந்த காலகட்டத்தில் 89.9 மில்லியன் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின்  முதல் கட்டத்தின் நோக்கங்களில் கைமுறையாக துப்புரவு செய்வதை ஒழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் துப்புரவு நடைமுறைகள் தொடர்பான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் உள்ளூர் மட்டத்தில் திறனை அதிகரிப்பது ஆகியவை அடங்கும். ஆனால், இந்த திட்டத்தை சில மாநிலங்கள் முழுமையாக செயல்படுத்தி வந்தாலும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் மெத்தனமாகவே செயல்பட்டு வருவது ஆய்வுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் சுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்துவோர் 28 சதவீத மக்களே என்கிறது ஒரு புள்ளிவிவரம். மேலும் 65 சதவீத மக்கள் இன்றும் முழுமையான கழிப்பறை வசதிகளைப் பெறவில்லையெனவும், 50 சதவீத மக்கள் இன்றும் திறந்த வெளியில்தான் மலம் கழித்து வருவதாகவும் அந்தப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. பல இடங்களில் கழிவறை வசதியிருந்தும் கூட அதை முறையாக 40 சதவீதம் பேர் பயன்படுத்துவதில்லை.

மக்கள் புழங்கக்கூடிய பொது இடங்களில் மிக முக்கியமானது பேருந்து நிலையங்கள். அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் கூடக்கூடிய சுகாதாரமற்ற இடமாக உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளின் மூலம் மிகப் பெரிய கொடிய நோய்கள் மக்களை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், நிமோனியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை ஏற்படுத்துபவையாக பொது இடங்களின் கழிப்பறைகள் உள்ளன என்றால் மிகையில்லை. ஒரு நகரத்தின் தூய்மையை அதன் தூய்மையை வைத்துக் கணித்துவிட முடியும். மேலும், அதை நிர்வகிக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டு விடமுடியும்.

நகரங்களின் தூய்மைப் பணி மேற்கொள்ளக்கூடிய ஊழியர்களின் தியாகத்திற்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது. கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் அவர்கள் பணி செய் யவேண்டியுள்ளது. ஊழியர்களை அதிகாரிகள் திட்டுவது, பணிச்சூழலை மாற்றி அவர்களை இம்சிப்பது போன்றவை அல்லாமல் அவர்களை அரவணைத்துப் பணி செய்வதில் அக்கறை செலுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும். ஊழியர்கள் அனைவரையும் வாரம் ஒரு முறை ஒருங்கிணைத்து தகுந்த மேற்பார்வையோடு பேருந்து நிலையங்களைச் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் ஏன் மேற்கொள்வதில்லை. அதே வேளையில் பொதுமக்களும், அரசு மற்றும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்பதும் வேதனையான விஷயம்.

நோய்கள்  அதிக அளவில் பரவி, மக்களை அச்சமூட்டும் நேரத்தில் மட்டும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் பிரசார நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. மற்ற நேரங்களில் சுகாதாரத்தை பேணுவதில் தீவிரம் காட்டுவது இல்லை. இதனால் நோய் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்பட மக்கள் கூடும் பகுதிகளி,  நகரத்தின் தலையாய இடத்தில் இவ்வளவு தூய்மைப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  சீர்கேட்டை வைத்துக்கொண்டு, பணம் வசூலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால்,  தூய்மை என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் கழிவு மேண்மைகளை  நிர்வகிப்பதில் மக்களின் விழிப்புணர்வும், அக்கறையும் மிகவும் அவசியமானதாகும்.

பேருந்து நிலையத்தைத் தூய்மை நிறைந்த இடமாக மாற்ற வேண்டும். பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியிலோ அல்லது மையத்திலோ அழகிய பூங்காவை அமைத்துப் பராமரிக்க வேண்டும். அதற்குள் ஒரு சிறிய நூலகத்தை அமைக்கலாம். சுவர்களில் அழகிய ஓவியங்கள், சங்க இலக்கியக் காட்சிகள், தமிழின் மேன்மைகள், அறக் கருத்துகள் இடம் பெறச் செய்யலாம். எச்சிலைக் கண்ட இடத்தில் துப்புதல் போன்ற செயல்களுக்குக் கடுமையான எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்து, பொது மக்கள் அவற்றைத் தவிர்க்கும்படி செய்ய வேண்டும். பேருந்து நிலையங்களை மண்ணுலகச் சொர்க்கமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் அவ்வாறு செய்தால்தான தமிழ்நாடு தூய்மையான மாநிலமாக மாறும்.

கடந்த ஆண்டு (2022) தூய்மையான மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மத்தியபிரதேசம் மாநிலம் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த சாதனைக்காக மத்திய பிரதேச மக்கள் பெருமளவில் பாராட்டப்பட வேண்டியவர்கள் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு 13வது இடத்தில் உள்ளது.

நாட்டிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தை பெற்றுள்ள நிலையில், தூய்மையான மற்றும் கழிவு மேலாண்மையில் பின்தங்கிய மாநிலமாகவே இருந்து வருகிறோம் என்பது வேதனைக்குறியது. 

தூய்மை மற்றும் சுகாதாரத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.   தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை யில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இந்தியாவின் அசுத்தமான மாநிலங்களில் இருந்து, நம்மை  மேம்படுத்துவது எப்படி என்பதை மத்திய பிரதேசத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய தேவை.

ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு வெளியான தகவலின்படி, துய்மை இந்தியா இயக்கம்  திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தி, தமிழகம் 2 வது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், 2022ம் ஆண்டைய நிலவரம் குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.  திமுக அரசு பதவி ஏற்றபிறகு, ஸ்வாச் பாரத் உள்பட பல்வேறு மத்தியஅரசு திட்டங்களில் தமிழ்நாடு அரசு கவனத்தை செலுத்தாதே இதற்கான காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.