மூத்த பத்திரிகையாளர் த.நா.  கோபாலன் அவர்களின் கட்டுரை:

இந்து. என்.ராம்
இந்து. என்.ராம்

 
1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்களை கடுமையாக ஒடுக்கத் தொடங்கினார். புலிகளை தீவிரமாக விமர்சித்து வந்த என்  போன்றோரும் அரசின் அணுகுமுறையினைக் கண்டித்து கூட்டங்கள் நடத்தினோம். அவற்றில் இந்து ராமும் பங்கேற்றார்.
ஒரு நிகழ்ச்சியில் நான் பேசுகையில், ராமதாசின் ஆர்ப்பாட்டங்களைக் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகளை ஃபாசிஸ்டுகள் என நான் கருதினாலும், அவர்களை ஆதரித்துப் பேசுவது ஒன்றும் பாவகாரியமல்ல. கருத்து சுதந்திரத்திற்கு ஆட்சியாளர்கள் விதிக்கும் எல்லைகளைத் தொடர்ந்து மீறித்தான் அனைத்து உரிமைகளையும் நிலை நாட்டமுடியும் எனக் கூறினேன்.
அப்போது மேடையிலிருந்த என் ராம், உடனே எழுந்து, வேகமாக மைக் அருகே வந்து, என்னை சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, அப்படியெல்லாம் எல்லைகளை விரிவுபடுத்துவதாகக் கூறிக் கொண்டு ஆபத்தான சக்திகளை வளர்த்துவிடக்கூடாது என உபதேசம் செய்தார்.
நானோ சாதாரண நிருபர். அவரோ ஆசிரியர். எப்படி மோதுவது, எனத் தயக்கம்.  பேசாமலிருந்துவிட்டேன். கூட்டம் முடிந்தபின் என் நண்பர்கள் என்னைக் கோழை எனக் கடிந்துகொண்டார்கள்.
விழாவில்...
விழாவில்…

அந்த ராம்தான், நாம் விடுதலைப் புலிகளை நிராகரித்தாலும் அவர்களை ஆதரித்துப் பேசும் கருத்துரிமை மற்றவர்களுக்கு இருக்கிறது என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லாத அதே ராம்தான் இன்று தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்து வரும், ஈழமே தீர்வு எனக்கூறும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு புகழாரம் சூட்டுகிறார். சிந்தனையாளர், நேர்மையானவர், சமூக அக்கறை கொண்டவர் என்கிறார்.
எவ்விதமான சமூக அக்கறை? எங்கள் பெண்களைக் கவர்ந்து செல்கின்றனர் தலித்துக்கள் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் பெரும் கலவரத்திற்கு காரணமாயிருந்தவர், தலித்துகளுக்கெதிராக இடைநிலை சாதியினரை அணி திரட்டுபவர், அவரை மக்கள் தொண்டர் என்கிறார் ராம்.
அதாவது அவரை அழைத்து மாலை மரியாதை செய்தால் எல்லோரும் புனிதர்களாகிவிடுவார்களா? விடுதலைப் புலிகளின் அணுகுமுறையினை நிராகரிக்கும், ராமதாசின் தலித் விரோதப்போக்கை சாடும் சிபிஎம் கட்சியினர் இதுவரை சமூக வலைத் தளங்களில் கூட ராமின் கருத்துக்கள் மீது எவ்வித விமர்சனத்தையும் வைக்கவில்லை.
ராம், சிபிஎம் உறுப்பினரோ இல்லையோ, ஆனால் அக்கட்சியின் முக்கிய தலைவர்களால் மதிக்கப்படுபவர், பல விஷயங்களில் கலந்தாலோசிக்கப்படுபவர். சிபிஎம் அமைப்புக்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளில் ராம் தான் சிறப்பழைப்பாளர். அப்படி இருக்கையில் அவர்கசளுக்கு ஏன் ராம் ராமதாசைப் பாரட்டுவது உறுத்தவில்லை? கட்சிக் கட்டுப்பாடு. வேறென்ன? இப்படித்தான் வீணாய்ப்போனார்கள்.
அவர்களை வீணாக்குவதில் ஸ்டாலினிஸ்ட் ராமுக்கும் பெரும் பங்குண்டு. அவர் நடத்தும் ஃப்ரண்ட்லைன் இதழில் சிபிஎம்மை விமர்சித்தோ அதன் நிலைப்பாடுகளுக்கு முரணாகவோ ஒரு வரி வராது.
அவ்விதழை மட்டுமே படித்து வந்தவர்களுக்கு மேற்கு வங்கத்தில் சிபிஎம் படு தோல்வியை சந்திக்கப்போகிறதென்று தெரிந்திருக்காது,  ஏன் தோற்றோம் என்றும் அவர்களுக்குத் தெரியவராது. சுற்றி வளைத்து மென்று விழுங்கி ,மயிலிறகால் வருடிக் கொடுத்து விஷயத்தை முடித்துவிடுவார்கள் அவ்விதழில்.
வெளிநாட்டுப் பிரச்சினையிலும் சீனா என்ன. மோசமான வடகொரியா பற்றிக்கூட கண்டனங்கள் வாராது. தியனென்மென் சதுக்கப் படுகொலைகளா அது என்ன, எப்போது என்பார்கள் ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் குழுவினர், கட்டுரையாளர்கள். சீன அரசின் அடக்குமுறைகளுக்குள்ளாகும் திபேத்திய பௌத்த பிக்குகள் பற்றி எதுவுமே பிரசுரமாகாது, கிளர்ந்தெழும் உய்கர் முஸ்லீம்கள் வதைபடுவது குறித்து மௌனமே.
ஏன் ஜிம்பாப்வேயை நாசமாக்கிக்கொண்டிருக்கும் அதன் அதிபர் முகாபே பற்றி கூட விமர்சிக்கமாட்டார்கள் அவர் மேற்குலகை எதிர்கொள்கிறாராம் அதனால் ஆதரவு.
இப்படி இருந்தால் ஆத்ம பரிசோதனை எப்போது? கம்யூனிச இயக்கங்கள் திருத்திக்கொள்வது எப்போது? அதைப் பற்றி ராமுக்கோ அல்லது சி பி எம்மை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் ஸ்டாலினிஸ்டுகளுக்கோ என்ன அக்கறை?
சரி சிபிஎம் எப்படியோ போகட்டும். நான் இப்போது விமர்சிப்பது என். ராமைத்தான். துவக்க காலத்தில் உண்மையான கம்யூனிஸ்டாகத்தான் இருந்தார் அவர் எனச் சொல்லலாம். இந்து தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சகஜமாக எல்லோருடனும் பழகுவார். லாரிகளில் கூட பயணம் செய்வார்.
பின் அமெரிக்காவில் இந்து நாளேட்டின் நிருபரானபோது, அன்றைய இந்திரா அரசு உலக வங்கியிடம் பல்வேறு மோசமான, மக்கள் விரோத நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பெரும் கடனைப் பெற்றபோது, அந் நிபந்தனைகளை அம்பலப்படுத்தி பிரபலமானவர்.
பின்னர் இந்தியா வந்து நாளேட்டில் முக்கிய பொறுப்பேற்று, சிறப்பாக எழுதுபவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், ஆழப்படித்தவர்களை செய்தியாளர்களாக்கி, வழக்கமான வழ வழா குழ குழா செய்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தவர் ராம்.  போஃபர்ஸ் ஊழலின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்ந்தவர்.
அதுவரை சரி. ஆனால் பிரச்சினை மறைமலை நகர் காங்கிரஸ் மாநாட்டில் துவங்குகிறது. அக்கட்சிக்கும் ராஜீவ் காந்திக்கும் தர்மசங்கடம் ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்குடன், அம்மாநாட்டின் போது ஒரு கட்டுரை எழுதி மேலும் பல ஐயங்களை எழுப்புகிறார் ராம்.
உருப்படியாக அதில் எதுவும் இல்லை. ஒரே நோக்கம் காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது போஃபர்ஸ் பற்றி விவாதித்து மக்களை முகம் சுளிக்கவைக்கவேண்டும் என்பதுதான்.
அப்போது இந்துவின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி பிரசுரிக்க மறுக்க, ராம் அடம்பிடிக்க பெரும் உள்நாட்டுக் கலவரம். இன்னமும் அது ஓய்ந்தபாடில்லை.
90களில் நிர்வாக ஆசிரியராக இருந்த மாலினி,  ஜெ அரசுக்கெதிராக பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த, அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படுகின்றன. வேறு சில இந்து நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் சிக்கல்.  பொதுவான பொருளாதார மந்த நிலை காரணமாகவும் வருவாய் குறைகிறது. இதைப் பயன்படுத்தி குடும்பத்திற்குள் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மாலினியைப் பதவி விலகவைக்கிறார் ராம்.
இவர் தலைமை ஆசிரியரானவுடன் ஜெயலலிதாவை சென்று சந்தித்து பூச்செண்டு கொடுத்து, அம்மா நாங்கள் உங்கள் பக்கமே, எங்களுக்குப் பிரச்சினை உருவாக்கிவிடாதீர்கள் என்று மன்றாடிக்கேட்டுக்கொண்டு வருகிறார்.
யாராரெல்லாம் அரசுக்கெதிரான செய்திகள் கொடுத்து வந்தனரோ அவர்களையெல்லாம் ஓரம் கட்டுகிறார். அவமானப்படுத்துகிறார். அது மட்டுமல்ல இந்து பதிப்புக்கள் வெளியாகும் மாநிலங்களின் அரசுகளுக்கெதிரான செய்திகளை வெளியிடவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
ஆக இவரது வீர பிரதாபங்களெல்லாம் வெளியில்தான், மற்றபடி காரியத்தில்) கண்வையடா தாண்டவக்கோனே என்பதில் தெளிவாக இருந்தார் தோழர். நிறுவன வருவாயைப் பெருக்கும் நோக்கில் எவ்வித சமரசத்தையும் செய்துகொள்ளலாம் என்பதே ராமின் அணுகுமுறையாக இருந்தது. அவருடைய செல்வாக்கும் கூடியது. தினமணி வைத்தியநாதன் பாணியில், இந்து ஏட்டு மரபிற்கு முரணாக இவரது மலைப் பிரசங்கங்கள் நீள நீளமாக பிரசுரமாகும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும்தான்,
ஆனால் என்ன செய்ய, ஆண்டொன்று போனால் வயதும் ஏறுமே? 65 ஆனது. அந்த வயதில் ஓய்வுபெறுவது இந்துவில் ஒரு நியதி. ஆனால் இவருக்கு விலக மனமில்லை.
விளம்பரம் முக்கியத்துவத்தை இழப்பதற்கப்பால் இவர் விலகினால் மாலினி-ரவி கூட்டணி அல்லவா ஆசிரியர் பொறுப்பேற்கும்?
ஒருவருடம் அந்தா இந்தா என்று போக்கு காட்டிவிட்டுப் பின் மீண்டும் ஒரு சதி செய்து, இந்து நாளேட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளியிலிருந்து ஒருவரை, ஏட்டின் டெல்லிப் பதிப்பிற்குத் தலைமை தாங்கிவந்த சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக்குகிறார்.
அவர் சிறப்பாக செயல்பட்டு வந்த வேளையில், மாலினி-ரவியுடன் சமரசம் செய்துகொண்டு, அவரை வெளியேற்றுகிறார் என் ராம். இப்போது சித்தார்த் அல்லல்படுகிறார். ஆனால் இவருக்கென்ன அக்கறை? இவர் அதிகாரம் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தால் சரி.
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் மோதல் மூண்ட வேளையில் களத்தில் இருந்து செய்திகளை அனுப்பிவந்தவர் டிபிஎஸ் ஜெயராஜ்.
இந்திய வீர்ர்கள் சிலர் இலங்கைத் தமிழ் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கினர் என்று அவர் செய்தி அனுப்ப, இந்துவில் பிரசுரமாக ஒரே கலாட்டா.
ஆனால் மறுநாளே அப்படி ஏதுமே நடக்கவில்லை என சாதிக்கும் இந்தியத் தரப்பின் அறிக்கை, இந்து நிர்வாகம் அச் செய்திக்கு மன்னிப்பும் கோருகிறது. வழமையாக அத்தகைய மறுப்பு வருமானால், சம்பந்தப்பட்ட செய்தியாளர் என்ன சொல்கிறார் என்பதும் வெளியாகும்.
ஆனால் இம்முறை ஜெயராஜிடம் கேட்கவே இல்லை. அவ்வளவு ராஜ விசுவாசம், அரசைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் தெளிவு. பிறகு ஜெயராஜ் வெளியேற்றப்படுகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் வாழ்வாதாரம் என்பதைப் பற்றியெல்லாம் மவுண்ட்ரோட் மார்க்சிஸ்டுக்கு என்ன கவலை?
த.நா. கோபாலன்
த.நா. கோபாலன்

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையேயான போரை நிறுத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியபோது, நிறுத்தாதே, இலங்கைக்கு நெருக்கடி கொடுக்காதே, புலிகள் அழிக்கப்படுவதைத் தடுக்காதே என எட்டு பத்தி செய்தி முதல் பக்கத்தில் வெளியிட்டு, அதிபர் மஹிந்தாவையும் மேற்கோள் காட்டிய அந்தப் பெருமகன் தான் இன்று பிரபாகரன் கொல்லப்படவில்லை, மீண்டும் ஈழப்போர் தொடங்கும் எனக் கதையளந்து வரும் ராமதாசிற்கு வாழ்த்துப்பா பாடுகிறார்.
அதாவது அவருக்கு மேடை போட்டுக்கொடுத்து விட்டால், கவுரவிப்பவர் எவராயிருந்தாலும் அவர்களைப் புகழ்ந்து தள்ளுவது என்றால் இவரென்ன வெங்காய கம்யூனிஸ்ட்? . இவர்களால் இவருக்கு எதுவும் ஆகப்போவதில்லை. ஆனாலும் அப்படி ஒரு சுயமோகம், பொய் புகழ்ச்சியில் மயங்குகிறார்.
கொடுமை என்னவெனில் இப்படிப்பட்ட மாய்மாலங்களில் இறங்காவிட்டாலும் ராமை பலர் மதிக்கவே செய்வர். மெத்தப் படித்தவர், முற்போக்கு சிந்தனையாளர். ஆனாலும் பாருங்கள் இப்படி அவலமான ஒரு போக்கு.
இன்னொருபுறம் மூச்சுக்கு முன்னூறு முறை பார்ப்பனர்களை சாடினாலும், ராம், மாலன் திருப்பூர் கிருஷ்ணன் இவர்களை வைத்துக்கொண்டு விழா நடத்திக்கொள்ளும் மருத்துவர் மாலடிமை. என்ன அருமையானதொரு கூட்டணி? எவ்வளவு உற்சாகத்தைத் தருகிறது…  விளங்கும் தமிழ்ப் பண்பாடு!