சென்னை: ஆளுநர் ‘ஐஸ்ட் எ போஸ்ட்மேன் என சென்னையில் நடைபெற்ற திமுகவின் நீட்டுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்தார்-
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு, நீட்டை வைத்து அரசியல் செய்து வருகிறது. நடப்பாண்டு நீட் தேர்வு முடிந்து மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள நிலையில், சில மாதங்களை கடந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் நீட் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தது.
அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும், கவர்னர் ரவியை கண்டித்தும் தி.மு.க., இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் ஆகஸ்டு 20ந்தேதி நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வால் 21 உயிர்களை இழந்துள்ளோம். திமுக எந்த போராட்டத்தை நடத்தினாலும் அது எப்போதும் ஒரு சிறப்பாக, வியக்கும் வகையில் நடக்கும். 21 தற்கொலை என்று பேசிக் கொண்டிருக்கிறேன். இது தற்கொலை கிடையாது கொலை. இந்த கொலையை செய்தது மத்திய பாஜக அரசு அதற்கு துணை நின்றது அதிமுக அரசு.
இந்த நிகழ்ச்சியில் நான் அமைச்சராக பங்கேற்கவில்லை, சட்டமன்ற உறுப்பினராக பங்கேற்கவில்லை, நான் சாதாரண மனிதன் உதயநிதி ஸ்டாலினாக பங்கேற்று உள்ளேன். உயிரிழந்த மாணவர்களின் அண்ணனாக பங்கேற்று உள்ளேன். இந்த அமைச்சர் பதவி இருந்தா இருக்கட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்பட மாட்டேன். பொறுப்பில் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது திமுக. மாணவர்களின் கல்வி முக்கியம் அதனால் எந்த இழப்பு வந்தாலும் கவலைப்பட போவதில்லை. நாம் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆளுநர் பெயர் ஆர்.என்.ரவி கிடையாது ஆர்.எஸ்.எஸ் ரவி Who are you ? U are just postman. ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் நீங்கள் போட்டியிடுங்கள். அந்த இடத்தில் எனது கழகத்தின் கடைக்கோடி தொண்டனை நிறுத்துகிறேன் முடிந்தால் நீங்கள் வெற்றி பெற்று காட்டுங்கள்.
மருத்துவம் இல்லையென்றால் வேறு படிப்பு இல்லையா என்கிறார்கள் சிலர், அதை சொல்ல நீங்கள் யார்? இங்கு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று மற்ற மாணவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். மாணவர்கள் தற்கொலை சாதாரண விஷயம் என்கிறார் ஒரு பாஜக தலைவர். உங்க வீட்டு குழந்தைக்கு இப்படி நடந்தால் நீங்கள் இப்படி பேசுவீர்களா? தமிழ்நாட்டிற்கு பாஜக என்ற கட்சியே தேவையற்றது. பாஜக வுடன் சேர்ந்து அதிமுக வையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.
நீட் விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. நீட் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பிரதமர் வீட்டு முன் அமர்ந்து போராடுவோம். அதில் பங்கேற்க அதிமுகவில் இருந்து யாராவது ஒருத்தரை அனுப்புங்கள். அப்படி நீட் தேர்வு ரத்து ஆனால் அந்த வெற்றியை நீங்களே உரிமைக் கொள்ளுங்கள். அதிமுக இந்த சவாலுக்கு தயாரா?
மதுரையில் நடத்தப்படும் அதிமுக மாநாட்டில் நீட் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா உங்களால்? இரும்புப் பெண்மணியை தலைவராக கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நீங்கள் ஒரு பித்தளை மனிதராகவாவது இருக்க வேண்டாமா? அல்லது ஒரு பிளாஸ்டிக் மனிதனாக கூட இருக்க வேண்டாமா? மோடியும் அமிர்தாவும் பிசைந்து வைத்துள்ள களிமண்ணாக தான் நீங்கள் இருக்கிறீர்கள்.
அதிமுகவின் ஒருத்தராவது ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்களா? வருகின்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதனையடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.