காஞ்சிபுரம்: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் (Unmanned Aerial Vehicle / UAV – Drones) அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார் அருகே, 45 கோடி ரூபாயில், ‘ட்ரோன்’ பொது சோதனை மையம் அமைய உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களை, தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன. இது செலவினத்தை அதிகரிப்பதோடு காலதாமதமும் ஆகிறது. இந்த இடர்பாடுகளை களைய, மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க, ‘டிட்கோ’ நிறுவனம் திட்டமிட்டது. மத்திய அரசின் மானியத்துடன், இத்திட்டத்தை செயல்படுத்த, டிட்கோ டெண்டர் கோரியது. அதன் அடிப்படையில், ‘கெல்டிரான், சென்ஸ் இமேஜ், ஸ்டாண்டர்டு டெஸ்டிங் மற்றும் காம்ப்ளையன்ஸ், அவிக் ஷா ரீடெய்லர்ஸ்’ முதலான நான்கு நிறுவனங்கள், டிட்கோவுடன் இணைந்து, 45 கோடி ரூபாயில், ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க உள்ளன.
இம்மையம், ட்ரோன் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்கு தேவையான, பல்வேறு வசதிகளை, ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் வழங்கும். இச்சோதனை மையம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லம் வடகாலில் உள்ள, சிப்காட் தொழிற் பூங்காவில், 2.3 ஏக்கரில் அமைய உள்ளது. ட்ரோன் உற்பத்தியில், தமிழகம் சர்வதேச மையமாக திகழவும், பாதுகாப்பு துறையில் இந்தியாவின் தற்சார்பு தேவையை பூர்த்தி செய்யவும், இச்சோதனை மையம் வழிவகுக்கும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையின் மேம்பாட்டிற்கான முகவாண்மை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்பட்டு வருகிறது. இத்துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொது சோதனை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று ஆளில்லா விமான பொது சோதனை மையமாகும் (Unmanned Aerial Systems Common Testing Centre)
. தற்போது, இத்தகைய சோதனை மையம் கர்நாடக மாநிலம், சித்திரதுர்காவில் DRDO தனது பயன்பாட்டிற்காக உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களை தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன. இது செலவினத்தை அதிகரிப்பதோடு, சோதனைகளை மேற்கொள்ள காலதாமதமும் ஆகின்றது. இந்த இடர்பாடுகளை களையும் நோக்கத்துடன் மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் (DTIS), இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான (டிரோன்) சோதனை மையத்தை அமைக்க டிட்கோ நிறுவனம் திட்டமிட்டது.
மத்திய அரசின் மானியத்துடன் செயல்படும் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளியை கோரியது. அதன் அடிப்படையில், கெல்டிரான் (Keltron), சென்ஸ் இமேஜ் (Sense image) ஸ்டாண்டர்டு டெஸ்டிங் & காம்ப்ளையன்ஸ் (Standard Testing & Complances மற்றும் அவிக்ஷா ரீடெய்லர்ஸ் (Aviksha Retailers) முதலான நான்கு நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ. 45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் வழங்கும்.
இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழ்நாடு சர்வதேச மையமாக திகழவும் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் தேவையை பூர்த்தி செய்யவும் இச்சோதனை மையம் வழிவகுக்கும். “இந்தியாவின் முதல் பொது ஆளில்லா விமான சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைய இருப்பது, வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழலில் உயரிய இடத்தை தமிழ்நாடு அடைய வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டு. இத்துறையின் தேவைகளை புதுமையான முறையில் பூர்த்தி செய்து முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறோம்.
வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை துவங்குவதற்கு விருப்பமான இடமாக தமிழ்நாட்டை மாற்ற இந்த சோதனை மையம் உதவும். வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித்துறையின் பிரதிநிதிகளுடன் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் பல ஆலோசனைகள் பெறப்பட்டன. இத்துறை மேலும் வளர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இம்முயற்சிகளுக்கான பலன்கள் விரைவில் கிடைக்கும்” என்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.