அகமதாபாத்
தமிழுடன் இந்தியையும் தமிழர்கள் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். மேலும், அவர் இந்த விழாவில் உரையாற்றினார்
அமித்ஷா தனது உரையில்
”அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாப்பதும், உயர்த்துவதும் பட்டம் பெறும் உங்கள் அனைவரின் கடமை. காரணம், அவைதான் நமது கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணத்தை கொண்டிருக்கின்றன. நாம் நமது மொழிகளை வலுவாக ஆக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கியமான அம்சம், குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியைப் பயிற்றுவிப்பது.
குழந்தைகள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்க வேண்டும். ஆனால் குஜராத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை குஜராத்தி மொழியுடன் இந்தியையும், அசாமைச் சேர்ந்த குழந்தை அசாம் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும். அதேபோல, தமிழர்கள் தமிழுடன் இந்தி மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.
இங்குப் பட்டம் பெற்றோர், அவர்களது சமஸ்கிருத அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது உபநிஷதங்களிலும், வேதங்களிலும், சமஸ்கிருத மொழியிலும் அறிவுச்செல்வம் நிறைந்திருந்திருக்கிறது. அவற்றை நீங்கள் கற்கும்போது, வாழ்வின் எந்த பிரச்சினையும் உங்களுக்குப் பிரச்சினையாகவே இருக்காது”
என்று கூறி உள்ளார்.