டெல்லி நிர்வாக சட்டத்துக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியுள்ள கடிதத்தில் “டெல்லியில் வாழும் 2 கோடி மக்கள் சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு நன்றியுணர்வுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
டெல்லி மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்த உங்களை மனதார வாழ்த்துகிறேன். நமது அரசியலமைப்பின் கொள்கைகள் மீதான உங்கள் தளராத விசுவாசம் பல தசாப்தங்களாக நினைவுகூரப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேச பகுதிக்குள் உள்ள குடிமைப் பணியாளர்கள் அனைவரும் மத்திய அரசின் கீழ் செயல்பட வழி செய்யும் டெல்லி நிர்வாக சட்ட மசோதா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்கள் மாநிலங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது.
இந்த நிலையில் மசோதாவுக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.