திருவனந்தபுரம்:  ஆடி மாத நிறை புத்தரிசி பூஜைக்காக கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) மாலை நடை திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து  நாளை ( ஆகஸ்ட் 10ஆம் தேதி)  காலை ஆறு மணிக்கு நிறைவுத்தரிசி பூஜை தொடங்கும். இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை பகவான் ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும் இதற்காக செட்டி குளங்கரா கோயில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக நெல் பயிரிடப்பட்டிருந்தது இந்த நெற்கதிர்கள்  அறுவடை செய்யும் பணி பூஜை செய்து  தொடங்கப்பட்டது.

அறுவடை செய்த நெற்கதிர்கள் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன் சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் வழங்கப்பட்டு இந்த நெற் கதிர்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.  இந்த நெற்கதிர்கள் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் வைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூஜைகள் நடத்தப்படுகிறது அன்று இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

இதையொட்டி, கோவிலில், நாள் முழுவதும் நெய்யபிஷேகம் அஸ்டாபிஷேகம் உஜபூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

 நாட்டில் விவசாயம் செழித்து, வளம் பெருகுவதற்காக, ஆண்டுதோறும் நிறை புத்தரி பூஜை நடத்தப்படுகிறது. இதுபோன்ற பூஜைகள், தமிழ்நாட்டில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, திக்குறிச்சி மகாதேவர், நாகராஜா உள்ளிட்ட முக்கிய கோவில்களில், நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெற உள்ளது. திருக்கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வயல்களில் இருந்து, நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, அவை, குமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, மேள- தாளங்கள் முழங்க, ஊர்வலமாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு, நெற்கதிர்கள் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்படும். அதன்பின், பக்தர்களுக்கு, அந்த நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

நிறை புத்தரிசி பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்களை வீட்டின் முன் கட்டி வைத்தால், வளம் செழிக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.